லலிதா ஜூவல்லரியில் நடந்த ஐ.டி ரெய்டில் சிக்கிய ரூ.1000 கோடி..! சேதாரம் என்று பலகோடி ரூபாய் கணக்கில் காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

சென்னை: லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான 27 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் லலிதா ஜூவல்லரியின் பல்வேறு கிளைகளில் வருமான வரி சோதனையானது துவங்கப்பட்டது. சுமார் 27 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் மட்டுமல்லாமல் மும்பை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர், ஆகிய இடங்களிலும் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனையானது முதற்கட்டமாக துவங்கியது. இவர்கள்  வைத்திருக்கும் தங்கம் இருப்பு தொடர்பாகவும், அவர்கள் விற்பனை செய்த ரசீதுகள் தொடர்பாகவும், ஆய்வு செய்த போது பல முறைகேடுகள் நடத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 3 நாட்கள் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. தற்போது நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவில் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் 1.2 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத பணத்தை ரொக்கமாக தாங்கள் பறிமுதல் செய்திருப்பதாகவும், வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு காலத்தின் போது இவர்களின் கணக்குகளை ஆய்வு செய்ததில் பல இடங்களில் விளக்கமே அளிக்க முடியாத அளவுக்கு பெரிய அளவு முதலீடுகளை இவர்கள் செய்திருப்பதாகவும், குறிப்பாக ரொக்கமாக இவர்கள் பணத்தை முதலீடு செய்திருப்பதாக இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல இடங்களில் பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்கம் வாங்கிய விவகாரத்திலும் முறைகேடு நடந்திருப்பதாகவும்,

அதே நேரத்தில் இவர்கள் தங்கம் இருப்பு வைத்திருப்பதிலும் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து லலிதா ஜூவல்லரியின் நிர்வாகிகள், உரிமையாளர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: