பெரியபாளையம் ஆரணி ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

ஊத்துக்கோட்டை: சென்னை - திருப்பதி செல்லும் சாலையில் உள்ள பெரியபாளையம் கிராமத்தில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஆரணி ஆற்றின் கரையோரத்தில், புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆடி மாதங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு சென்னையில் இருந்து வரும் பக்தர்கள் ஆரணி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் வழியாகத்தான் கோயிலுக்கு செல்ல வேண்டும். இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் அருகே உள்ள இறைச்சி கடைகளில் இருந்து மீன், கோழி, ஆடுகள் போன்றவற்றின் கழிவுகளையும் குப்பைகளையும் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் நீண்ட காலமாக கொட்டி வருகின்றனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பவானியம்மன், சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். தடையை மீறி கொட்டுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். மேலும், அந்த பாலப் பகுதிகளை முழுமையாக சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>