×

தாஸ்.... தாஸ்...9,10,11 வகுப்பு படிக்காமலே... ஆல்.. பாஸ்.. பாஸ்... கல்வியை கேலிக்கூத்தாக்கும் தமிழக அரசு: குழப்பத்தில் மாணவர்கள் எதிர்காலம்

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு., படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்று கூறப்பட்டாலும் அத்திபூத்தாற் போல ஓரிருவர் மட்டுமே  படிக்காமல் மேதையாக  உருவாக முடியும். எனவே, அனைத்து மாணவர்களுக்கும்  அடிப்படை கல்வி, அதற்குரிய தேர்வு, மதிப்பெண் சான்றிதழ் ஆகியன அவசியம். இவை உயர்கல்வியில் சேர்வதற்கு மட்டுமல்ல மாணவன் விரும்பும் துறையில் சேர்ந்து படிப்பதற்கும் உதவக்கூடியது. எனவே, பொதுத்தேர்வு மதிப்பெண் என்பது வாழ்வில் உயர்ந்த நிலைக்கு முன்னேறும் வரைக்கும் மாணவர்களுக்கு அனைத்து கட்டத்திலும் அவசியம். அரசு வேலைக்கு சென்றாலும், தனியார் வேலைக்கு சென்றாலும் மதிப்பெண் பட்டியல் தான் அவன் திறமைக்கு சான்று. ஆனால் இதை உணராத தமிழக அரசு 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது நகைப்புக்குரியது. விளையாட்டு துடுக்கோடு சுற்றித்திரியும் மாணவர்கள் தாஸ்... தாஸ்... ஆல்.. பாஸ்.. பாஸ்.. என்று இதை ஜாலியாக தற்போது எடுத்து கொள்ளலாம்.

ஆனால் அடிப்படை கல்வி அனுபவம் இல்லாத மாணவன் நல்ல நிலைக்கு வந்தாலும் கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று தத்துபித்து என்று உளறி அதை படித்தவர்கள், கல்வியாளர்கள் விமர்சிக்கும் போது, தேர்வெழுதாமல் அரசு  நம்மை பாஸாக்கிவிட்டு  வாழ்க்கையோடு  விளையாடிவிட்டதே என்று வேதனைப்படுவான். கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் ஓராண்டாக மூடப்பட்டன. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட பிறகு டாஸ்மாக் உள்பட அனைத்தும் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அரசிடமிருந்து தெளிவான பதில் வரவேயில்லை. பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை என்றும், பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் ஓராண்டில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டி மட்டுமே சதம் அடித்தது. அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ மாணவர்கள் எதிர்காலம் குறித்து எந்த அக்கறையும் கிடையாது  கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. ஆன்லைன் வகுப்புகளை நடத்தியது. பிறகு பாடத்திட்டம் பாதியாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையில், ஆன்ட்ராய்டு செல்போன் வாங்க வசதியில்லாமலும், ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கமுடியாத விரக்தியிலும், பாடம் புரியவில்லை என்ற பயத்திலும் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்தேறியது.  இந்நிலையில், கல்வியில் அரசியல் புகுந்து விளையாடியது. சட்டமன்ற தேர்தலில் வாக்கு வங்கியை குறிவைத்து அதிமுக அரசு 9, 10,11 மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சியை பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளது. இதனால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்காமல் அடுத்த வகுப்புக்கு செல்ல இருக்கிறார்கள். ஆனால் படிப்பை தங்களது எதிர்காலம் என்று கருதி கற்றல் ஆர்வத்துடன் இருந்த மாணவர்கள், செல்போன் வாங்கமுடியாலும், ஆன்லைன் வகுப்புகள் புரியாமலும் தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் அனுபவித்த உளவியல் ரீதியான துன்பத்துக்கும், மரணத்துக்கும்  இந்த அரசு பொறுப்பேற்றுக்கொள்ளுமா?

ஜனவரி மாத இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களும் பள்ளிக்கு செல்ல தொடங்கிவிட்ட நிலையில், கல்வியாளர்கள், அதிகாரிகள், ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசி–்த்து தேர்வை நடத்தும் வழிமுறைகளை அரசு வகுத்திருக்க வேண்டும். ஆனால், அனைவருடனும் ஆலோசனை நடத்திவிட்டோம், மாணவர்களின் சுமையை அறிந்துள்ளோம் எனவே தேர்வுகளை ரத்துசெய்கிறோம் என்று முடிவு எடுத்திருப்பது கேலிக்கூத்தானது. சிபிஎஸ்இ பள்ளியில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் நடத்தப்படுகிறது. அதுபோன்று தமிழக அரசும் நடத்தியிருக்கலாம். ஆனால் தேர்வின்றி தேர்ச்சி  பெற்ற  மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புக்கு செல்லும் போது பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். மேலும்  ஆசிரியர்களுக்கும் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து 80 சதவீதமும், வருகைபதிவேட்டை வைத்து 20 சதவீத மதிப்பெண்கள் வழங்குவது குளறுபடிகளை தான் ஏற்படுத்தும்.
தேர்வு என்பது பள்ளிக்கல்வி செயல்பாட்டில் ஒரு முக்கிய செயல்பாடு. அதைக் சீர்குலைப்பது மொத்த செயல்பாடுகளையும் பாதிக்கும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் எந்த அடிப்படையில் உயர்படிப்புகளுக்கான குரூப்பைத் தேர்வு செய்வார்கள்?  என்ற கேள்வியையும் கல்வியாளர்கள் எழுப்புகின்றனர். கடந்த ஆண்டும் தேர்வின்றி மாணவர்கள் பாஸ் செய்யப்பட்டுவிட்டனர்.

ஆனால் கர்நாடக மாநிலத்தில் கொரோனா காலத்திலும் பாதுகாப்புடனும், சமூக இடைவெளியுடனும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பொதுத்தேர்வை அரசு சிறப்பாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக அரசு கல்வியை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்றும் மாணவர்கள் எதிர்காலம் குழப்பத்தில் இருப்பதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எந்த அடிப்படையில் மதிப்பெண் தருவார்கள். கொரோனா காலகட்டத்தில் தேர்வில்லாமல் தேர்ச்சி அறிவித்ததால் சான்றிதழில் குறியீடு எதாவது இடம்பெறுமா, சான்றிதழ் நிறம் மாற்றி அடையாளப்படுத்துவார்களா போன்ற பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் எந்த அரசும்  எத்தனை நெருக்கடியிலும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வி விவகாரத்தில் இவ்வளவு அலட்சியம் காட்டியது கிடையாது. தற்போது எடுத்துள்ள இந்த முடிவு தவறான முன்னுதாரணமாக வரலாற்றில் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் கல்வியியல் நிபுணர்கள்.

செல்லாக்காசாகிவிட்டது கல்வி
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், பள்ளிகளில் 9,10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல்கள் எப்படி வழங்குவது என்பது குறித்து இதுவரை வழிகாட்டு நெறிமுறைகளை இன்னும் தயார் செய்யவில்லை. அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த பிறகு மதிப்பெண் பட்டியலில் பாடங்கள் வாரியாக மதிப்பெண் எப்படி குறிப்பிடப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.  9ம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்புக்கு சென்றுவிடுவார்கள். பிளஸ் 1 மாணவர்கள் பிளஸ்2 வகுப்புக்கு சென்றுவிடுவார்கள். ஆனால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் நிலைதான் கவலையாக இருக்கிறது. அவர்கள் வேறு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர முயன்றாலும், அல்லது பத்தாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டால், அவர்கள் சான்றிதழில் அவரின் தேர்ச்சி நிலை மதிப்பெண் அடிப்படையில் குறிப்பிடப்படுமா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றபிறகு பிளஸ் 1 வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அறிவியல், கணக்கு பாடங்களை முதன்மையாக கொண்ட குரூப் எடுக்க விரும்பினால் எந்த அடிப்படையில் அவர்களுக்கு குரூப் ஒதுக்குவார்கள் என்பதும் கேள்வியாக இருக்கிறது. மாணவர்கள் விருப்பத்தின் பேரில் ஒதுக்கப்படுமா அல்லது பள்ளித் தலைமை ஆசிரியர்களின் விருப்பப்படி, ஒதுக்கப்படுமா என்பதும் கேள்வியாக இருக்கிறது. அப்படி தலைமை ஆசிரியர்கள் ஒதுக்கும் போது, அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை, அருகாமையில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை, இட ஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். அது நடக்குமா என்பது சந்தேகம்தான். தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்று அறிவித்துள்ளதை பார்க்கும் போது, தேசிய கல்விக் கொள்கையில்  2020ம் அம்சத்தில் கூறப்பட்டுள்ளபடி, பள்ளிப் படிப்பை செல்லாக்காசாக மாற்றும் முயற்சிக்கு இந்த அறிவிப்பு துணைபோவதாக தெரிகிறது. ஏனென்றால், அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மதிப்பெண் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை என்றார்.


மவுனம் ஏன்
தேர்வின்றி அனைவரும் பாஸ் என்ற அரசு அறிவிப்புக்கு தனியார் பள்ளி நிர்வாக சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஏனென்றால் தேர்தல் அறிவிக்கப்பட்டநிலையில் அவர்கள் அப்பணியில் பிஸியாகி விடுவார்கள். அதன் பிறகு மாணவர்களுக்கு தேர்வு வைத்தால் அப்பணியும் கூடுதல் சுமையாகிவிடும் என்று நினைத்து அமைதியாகிவிட்டார்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

இனிதான் இருக்கு..
10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமல் பாஸ் செய்யப்பட்ட மாணவர்கள், தொழிற்படிப்புகளான ஐடிஐ, பாலிடெக்னிக் ஆகியவற்றில் டிப்ளமோ படிப்பில் சேர மதிப்பெண்கள் அடிப்படையில் தான் முன்னுரிமை வழங்கப்படும். தற்போது இந்த தொழிற்பயிற்சி கல்லூரிகள் மாணவர்களை எந்த அடிப்படையில் சேர்ப்பது என்ற நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இது ஒருபுறம் என்றால், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்று ராணுவம், போலீஸ், அஞ்சல்துறை உள்பட பல்வேறு அரசு துறையில் வேலைவாய்ப்பும் உண்டு. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை  எப்படி தகுதி பார்த்து தேர்வு செய்வார்கள். கொரோனா காலகட்டத்தில் அரசே பார்த்து போனா போகுது என்று பாஸ் செய்யப்பட்ட மாணவர்கள் இவர்கள் என்று சான்றிதழை பார்த்ததும் கணித்துவிடுவார்கள். அப்போது அந்த மாணவனுக்கு வேலைவாய்ப்பிலும் பின்னடைவு தான் ஏற்படும். இப்போது நிம்மதி பெருமூச்சு விடும் மாணவர்கள் எதிர்காலத்தில் இப்படி ஒரு பிரச்னையையும் சந்திக்க நேரிடலாம்.

ஒரு தலைமுறை பாழ்
கொரோனா தொற்று ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்ட  போதும், மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் திறந்த போதும் பள்ளி கல்வித்துறை பொறுப்பை வகித்த அமைச்சர் செங்கோட்டையன், எந்த திட்டமிடலும் இல்லாமல் செயலற்று இருந்தது அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியது. ஆரம்ப கல்வியை மட்டுமே அமைச்சர் படித்திருப்பதாலோ என்னவோ கல்வியின் அருமை பற்றி தெரியாமல்,மாணவர்களின் நலன் கருதாமல் மேம்போக்காக தனது காலத்தை கடத்திவிட்டார். அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனா காலத்திலேயே முறையாக திட்டமிட்டு பொதுத்தேர்வை நடத்திய முறையை தமிழக அமைச்சரும் கடைபிடித்திருந்தால் மாணவர்கள் தற்போது தைரியமுடன் இருந்திருப்பார்கள். ஆனால் தான் பொறுப்புவகிக்கும் துறையில் எந்த கவனமும் செலுத்தாத அமைச்சரால் ஒரு தலைமுறையே பாழாகிவிட்டது என்று சமூகஆர்வலர்கள் புலம்புகிறார்கள்.

Tags : of Tamil Nadu , Class, Education, Government of Tamil Nadu, Students Future
× RELATED அதிகரிக்கும் கொரோனா தொற்று!:...