வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு களக்காடு, கடையநல்லூர் பகுதியில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர்: வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்கிய அதிமுக அரசை கண்டித்து கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி, களக்காடு அருகே திருக்குறுங்குடியில் முக்குலத்தோர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இடஒதுக்கீடு அறிவித்தார். இதையடுத்து தென்மாவட்டங்களில் சீர்மரபினர் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த சொக்கம்பட்டியில் தேவர் சமுதாயம் சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வன்னியருக்கு மட்டும் 10.5சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதை கண்டிப்பதுடன், சீர்மரபினருக்கும் 10.5 சதவிகித உள்இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என திரளானோர் கையில் பதாகைகளுடன் பங்கேற்றனர். இதுபோல் களக்காடு திருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பி தலைவன்பட்டயத்தில் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் கிராமத்தின் நுழைவாயில் மற்றும் முக்கிய இடங்களில் கருப்புக்கொடிகளை வரிசையாக கட்டி தோரணங்கள் போல் தொங்கவிட்டுள்ளனர். இதுபோல் மலையடிபுதூரிலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடிகள் கட்டியுள்ளனர்.

Related Stories: