அரசியலில் இருந்து சசிகலா முழுக்கு ஏன்? : பின்னணியில் பாஜக இருப்பதாக பரபரப்பு தகவல்கள்

சென்னை: ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவது ஏன் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது விலகலால் அதிமுக தலைவர்கள் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவரை பதவி விலகும்படி உத்தரவிட்ட சசிகலா, தானே முதல்வராக திட்டமிட்டார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கி, ஆட்சியை கவிழ்க்க முயன்றார். அதேநேரத்தில், சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமியை, முதல்வராக பதவி ஏற்கும்படி கூறினார்.பின்னர், கட்சியில் துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தார். சில மாதங்களிலேயே எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சியில் இருந்து தினகரனை எடப்பாடி பழனிசாமி வெளியேற்றினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்களையும் அதிமுகவில் சேர்த்துக் கொண்டார். பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால் டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.

இந்தநிலையில், சிறையில் இருந்து கடந்த ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையானார். கொரோனா காரணமாக ஒரு வார ஓய்வுக்கு பிறகு தமிழகம் வந்தார். பெங்களூரில் இருந்து கிளம்பிய அவரை தமிழக எல்லையான ஓசூரில் அமமுக தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து சென்னை வரை 23 மணி நேரம் பயணம் செய்து தொண்டர்களை சந்தித்தார். அப்போது, மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று அறிவித்தார்.இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பாராதவகையில் அரசியலில் இருந்து விலகும் முடிவை சசிகலா எடுத்து, நேற்று இரவு அறிக்கையாக வெளியிட்டார். அந்த அறிக்கையில், நான் என்றும் வணங்கும் என் அக்கா, ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான, ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிமுகவை கைப்பற்றுவேன் என்று கூறிவந்த நிலையில், சசிகலாவின் இந்த திடீர் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகிறது. சசிகலாவின் இந்த முடிவால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சசிகலாவை பற்றி அதிமுக தலைவர்களுக்கு நன்கு தெரியும். அதேசமயம் தினகரன், சசிகலாவை சந்தித்து முடிவை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி உள்ளார். தினகரனின் சமாதானத்தை சசிகலா ஏற்கவில்லை என்று வெளியில் கூறப்படுகிறது.சசிகலா திடீரென அரசியலுக்கு முழுக்கு முடிவை எடுக்க என்ன காரணம் என பலரும் பரபரப்பாக விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுபற்றி சசிகலா தரப்பின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:

சிறையில் இருந்து வந்தவுடன், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் தன்னை வந்து சந்திப்பார்கள் என்று சசிகலா எதிர்பார்த்தார். ஆனால் ஒருவர் கூட வரவில்லை. அதிமுகவில் இருந்து ஒரு ஒன்றிய செயலாளர் கூட எட்டிப்பார்க்கவில்லை. இது சசிகலாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போதுதான், சிறையில் இருந்த போது தமிழகத்தில் என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள், நலம் விரும்பிகள் பலரும் டிடிவி தினகரனின் போக்கால்தான் ஆட்சியும், கட்சியும் நம்மை விட்டுச் சென்றன. இன்று ஒருவர் கூட வராமல் போனதற்கும் அவர்தான் காரணம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அவர் முடிவு எடுக்கிறார். யாருடனும் ஆலோசனை நடத்தவில்லை. யாரையும் மதிப்பதில்லை என்று சரமாரியாக புகார்களை தெரிவித்தனர்.இதுகுறித்து டிடிவி தினகரனிடம் சசிகலா விசாரித்துள்ளார். அதன்பின்னர் சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. கடந்த 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவுக்காக சசிகலாவின் வீட்டுக்கு தினகரன் வந்தார். அதன்பின்னர் இருவரும் சந்திக்கவில்லை.

நேற்று முன்தினம்தான் இருவரும் சந்தித்தனர். அப்போது, ‘‘பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தான் பேசியதாகவும், ஆரம்பத்தில் அவர்கள் ஆதரவாக இருந்தனர். இப்போது அமமுகவினரை பாஜக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்’’ என்று தினகரன் சசிகலாவிடம் கூறியுள்ளார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை, பாஜகவிடம் சரணடைய விரும்பவில்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். அப்போது கூட இருவரும் சரியாக பேசிக்ெகாள்ளவில்லை. அவர் சென்ற பிறகுதான் சில சமுதாய தலைவர்களை சசிகலா சந்தித்துப் பேசினார். இதையடுத்து நெருங்கிய உறவினர்களான இளவரசி, அவரது மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் சசிகலாவுக்கு கிடைத்தது. பாஜக மீது தமிழக மக்களுக்கு உள்ள கோபம் அதிமுகவை வீழ்த்தும் என்று நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், அதிமுக தோற்றால் சசிகலாவால்தான் தோற்றோம் என்று தொண்டர்கள் வருத்தப்படுவார்கள். இதனால், அதற்கு பதில் நாம் ஒதுங்கியிருந்தால் அதிமுக தொண்டர்களுக்கு கோபம் வராது. தோற்ற பிறகு இரு தலைவர்களுக்குள்ளும் கண்டிப்பாக மோதல் ஏற்படும். அப்போது அதிமுக தொண்டர்கள் நம்மை அழைப்பார்கள். அதுவரை ஒதுங்கியிருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.

அதேநேரத்தில் பாஜகவையும் அவர் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. இதனால்தான் டிடிவி மூலம் மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அது தோல்வியில் முடிந்ததால்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் சசிகலாவின் மறைமுக ஆதரவு டிடிவி தினகரனுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்காக பல வழிகளிலும் அவர் உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் டிடிவி தினகரனும் தெம்பாக வேலையை தொடங்கிவிட்டார் என்று கருதுகின்றனர். 32 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1989ல் ஜெயலலிதா இதேபோல அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். பின்னர் தீவிர அரசியலில் குதித்தார். அப்போது அவருடன் இருந்த சசிகலா இப்போது அதே அறிக்கையை கையில் எடுத்துள்ளார். அவர் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வருவார் என்கின்றனர் தீவிர அரசியல் பார்வையாளர்கள்.

Related Stories:

>