தமிழகத்தில் நள்ளிரவு முதல் லாரி வாடகை 30% அதிகரிப்பு

* உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

* அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்

சென்னை: தமிழகத்தில் லாரியின் வாடகை கட்டணம் நள்ளிரவு முதல் 30 சதவீதம் உயர்த்துவதாக, அதன் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 14 லட்சம் லாரிகள் பயன்பாட்டில் உள்ளன. டீசல் விலை உயர்வு காரணமாக தற்போதைய கட்டணத்தில் இருந்து 30% கூடுதலாக வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த இருவாரங்களுக்கு முன்பு பார்சல் லாரி வாடகையில் 25% உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக சென்னை, மாதாவரத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை தனித்தனியாக குறைந்து ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும்.

15 ஆண்டுகள் பழைய வாகன அழிப்பு நடவடிக்கையை 20 ஆண்டுகளாக நீட்டித்து மாற்றம் செய்திட வேண்டும். பழைய வாகன அழிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் குடும்பங்களில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும்.  இழப்பீடாக ₹10 லட்சம் வழங்கப்பட வேண்டும். காலாவதியான சுங்க சாவடிகளை போர்கால அடிப்படையில் உடனடியாக அகற்ற வேண்டும். மத்திய அரசு தற்பொழுது கொண்டு வந்துள்ள பாஸ்டேக் நடைமுறையில் வாகன உரிமையாளரிடம் பாஸ்டேக் கணக்கில் போதிய அளவுக்கு அதிகமாகவே பணம் இருந்த போதிலும், மென்பொருள், தொழில்நுட்ப கோளாறுகளால் வாகன ஓட்டிகளிடம் ஒருமுறைக்கு இருமுறை என மிரட்டி அச்சுறுத்தி கையில் உள்ள பணத்தை வசூல் செய்த பிறகும், வாகனம் சிறிது தூரம் கடந்தபிறகு பாஸ்டேக் கணக்கில் இருந்தும் பணம் எடுக்கப்படுகிறது.

இந்த முறைக்கேடுகளை அரசு உடனடியாக தடுக்க வேண்டும். மோட்டார் தொழிலில் ஈடுபட்டு வரும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன் அடைவதற்கு மோட்டார் தொழிலுக்கென தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனத்திற்கும் 3-3-2021 நள்ளிரவு முதல் தற்பொழுது பெற்றுவரும் வாடகையிலிருந்து 30% சதவீத வாடகையை உயர்த்தி பெற்றிட தீர்மானிக்கப்படுகிறது.

அரசு கூடுதலான மணல் குவாரிகளை திறந்து லாரி ஒன்றுக்கு குறைந்தது மாதத்திற்கு 6 லோடுகளாவது வழங்க வேண்டும். தமிழக நெடுஞ்சாலைகளில் பொதுமக்கள் வாகனம் உட்பட வெளிமாநிலங்களைப்போல் இரவு நேரங்களில் வாகனங்களை துரத்தி, ஓட்டுநர்களை மடக்கி பிடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தி கொள்ளையடித்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

கொரோனா காலகட்ட சாலைவரியை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நிறுவனங்களில் அதிக பாரம் ஏற்றுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. லாரி வாடகை உயர்வு காரணமாக காய்கறி மளிகை பொருட்கள் உள்பட மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக காய்கறி, கட்டுமான பொருட்கள், மருத்துவ பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்காததே  இத்தனைக்கும் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: