அர்ச்சகரை தரக்குறைவாக நடத்திய பெசன்ட்நகர் கோயில் செயல் அலுவலர் பணியிட மாற்றம்: இந்து அறநிலையத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: அர்ச்சகரை தரக்குறைவாக நடத்திய செயல் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து இந்து அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கை: சென்னை, பெசன்ட்நகர், மகாலட்சுமி கோயிலில் பணிபுரிந்து வரும் செயல் அலுவலர், அர்ச்சகர்களை தரக்குறைவாக நடத்துவதாக புகார் வந்தது. இதையடுத்து செயல் அலுவலரை பணியிடமாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை, பெசன்ட்நகர், மகாலட்சுமி கோயில் செயல் அலுவலர் சந்திரசேகரன், சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ராஜா இளம்பெரும்வழுதி பெசன்ட்நகர், மகாலட்சுமி கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் மாறுதல் செய்யப்பட்ட செயல் அலுவலர்களைத் தக்க மாற்று ஏற்பாடுகள் செய்து உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். செயல் அலுவலர்கள் தம்மிடம் உள்ள கோயில்களின் அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு மாறுதல் செய்யப்பட்டுள்ள கோயிலில் உடனே பணியில் சேர வேண்டும். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் செயல் அலுவலராக சந்திரசேகரன் இருந்த போது பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் அவர், அர்ச்சகரை தரக்குறைவாக பேசியதாக புகாரின் பேரில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>