நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை..!!

மும்பை: பாலிவுட் நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு பேன்டன் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு மற்றும் டிஸ்டிப்யூஷன் நிறுவனத்தை இயக்குநர் அனுராக் காஷ்யப், பாலிவுட் தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோர் சேர்ந்து தயாரித்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. தொடர்ந்து இவர்கள் வருமான வரி சரியாக செலுத்துவதில்லை என்று புகார்கள் எழுந்துவந்து நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக தற்போது முக்கிய சோதனையில் வருமானவரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பாலிவுட் நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடு மற்றும் மும்பையில் இருக்கக்கூடிய அலுவலகம் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது.

சோதனையின் முடிவில் கிடைக்கப்பெறும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்லவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளாகவே இந்த நிறுவனம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில், வருமானவரித்துறையினரின் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மும்பை பாலிவுட் வட்டாரத்தில் இந்த சோதனை பெறும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories:

>