ஆட்டோக்களுக்கான சிலிண்டர் கிலோவுக்கு 7.91 ரூபாய் உயர்வு: வாடகை ஓட்டுனர்கள் தவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 4.50 லட்சம் ஆட்டோக்கள் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுக்கலந்த புகை, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஒரு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்பை குறைக்கும்  வகையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பெட்ரோலில் இயங்கும் ஆட்டோக்களுக்கு பதிலாக எல்பிஜி எனப்படும் எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களை இயக்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி எல்பிஜியில் இயங்கும் ஆட்டோக்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் இயங்கும் ஆட்டோக்களில் சுமார் 75 சதவீதத்துக்கு அதிகமான ஆட்டோக்கள் எல்பிஜி முறையிலேயே  இயங்குகிறது. இந்த ஆட்டோக்களில் எல்பிஜி மட்டும் இல்லாமல், அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் பெட்ரோலில் இயங்கும் வகையிலான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தற்போது பெட்ரோல், டீசலை போல எல்பிஜியின் விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி, மார்ச் வரையில் ரூ.7.91 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிலோ ரூ.52.46க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை  கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜூட்மேத்யூ கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 4.50 லட்சம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. சென்னையில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளது. பெட்ரோல் விலையை போல எல்பிஜி விலையும் அதிகரித்து வருகிறது. 3 மாதங்களில் மட்டும் கிலோவுக்கு  ரூ.7.91 உயர்ந்து உள்ளது. இதைக்கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகைக்கு இயங்கும் கார்களில் எல்பிஜி பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்க வேண்டும். இதனால் காற்று மாசுபடுவது குறையும்.  இயக்கச்செலவும் குறையும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இதன் விலையை குறைப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: