2021ம் ஆண்டின் முதல் திட்டமான பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 19 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்; நடப்பாண்டில் 14 திட்டங்கள் இலக்கு - சிவன் பேச்சு

சென்னை: பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் மூலம் அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி வருகிறது. அந்தவகையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்டை இஸ்ரோ நேற்று காலை திட்டமிட்டபடி 10.24 மணிக்கு விண்ணில் செலுத்தியது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் பிப்ரவரி 27ம் தேதி காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

தொடர்ந்து, கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்டில் பிரேசில் நாட்டை சேர்ந்த அமசோனியா-1 முதன்மை செயற்கைக்கோள் மற்றும் இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதீஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி, நாக்பூர் ஜி.எச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோவை சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் உட்பட 19 செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டது.

ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 17வது நிமிடத்தில் 637 கி.மீ தூரத்தில் அமசோனியா-1 செயற்கைக்கோள் அதன் திட்டமிட்ட புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, மற்ற 18 செயற்கைக்கோள்களும் 1 மணி நேரம் 38 நிமிடங்களில் அதன் திட்டமிட்ட இலக்குகளில் நிலைநிறுத்தப்பட்டது. செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது: பி.எஸ்.எல்.வி சி51 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரேசிலை சேர்ந்த செயற்கைக்கோள் தயாரிப்பு குழுவிற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆண்டின் முதல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல், உயர்கல்வி நிறுவனங்கள் வடிவமைத்த 4 செயற்கைக்கோள்கள் தற்போது ஏவப்பட்டுள்ளது மிகவும் முக்கியம் வாய்ந்தது.  நடப்பாண்டில் மொத்தம் 14 விண்வெளி ஆய்வு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் 7 ராக்கெட் ஏவுதல், 6 செயற்கைக்கோள் திட்டங்கள் அடங்கும். இதேபோல், இந்தாண்டு இறுதியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பரிசோதனை ஓட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு பேசினார்.

இதைத்தொடர்ந்து, பிரேசில் நாட்டின் அறிவியில் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மார்க்கோஸ் சீசர் பான்டீஸ் பேசுகையில், ‘அமசோனியா 1 திட்டம் பிரேசில் விண்வெளி ஆய்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வெற்றி எங்களுக்கு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. இந்தியா, பிரேசிலுக்கு இடையிலான நல்லுறவுக்கு ஒரு அடையாளமாக இது விளங்கும். இத்தகைய ஆய்வுகள் வரும் காலங்களில் அதிகரிக்க வேண்டும்’ என்றார். பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் 78வது ராக்கெட். முதலாவது  ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 39வது ராக்கெட் ஆகும். அமசோனியா 1 செயற்கைகோளின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள். இந்த செயற்கைகோள் பிரேசில் நாட்டின் காடுகள் அழிப்பை கண்காணிப்பதற்கு,  அந்நாட்டின் விவசாயத்தை பகுப்பாய்வு செய்யவும் பயன்படும்.

* செயற்கைகோளில் மோடி படம், பகவத்கீதை வாசகம்

நேற்று விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதீஷ் சாட் செயற்கைக்கோளில் பிரதமர் மோடி பெயர் மற்றும் உருவப்படமும், பகவத்கீதை வாசகமும் பதிக்கப்பட்டு அனுப்பப்பட்டது.

Related Stories:

>