தேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்

திருவள்ளூர்: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. நேற்று முன்தினம் தேர்தல் அறிவிப்பு வெளியான நிமிடத்தில் இருந்தே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவுப்படி கலெக்டர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களில் இருந்த ஜெயலலிதா மற்றும் முதல்வர் பழனிசாமியின் படங்கள் அகற்றப்பட்டன.அமைச்சர்கள் பயன்படுத்தும்  விஐபிக்களுக்கான அரசு வாகனங்கள் நேற்று முன்தினம் இரவு திரும்ப பெறப்பட்டன. அரசு கட்டிடங்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் உள்ள முன்னாள் முதல்வர் படங்கள், பேப்பர் ஒட்டி மறைக்கப்பட்டன. மேலும், சுவர் விளம்பரங்களுக்கு தடை  விதிக்கப்பட்டுள்ளதால் நேற்று முதல் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி முழுவீச்சில் துவங்கியுள்ளன.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் மாலா தலைமையில் தலைமை எழுத்தர் பங்கஜம், துப்புரவு மேற்பார்வையாளர் குமார் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ஊத்துக்கோட்டை சாவடி, அண்ணாசிலை சிலை 4  முனை சந்திப்பு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் பொது இடங்களில் இருந்த கட்சிகளின் கொடி கம்பங்கள் மற்றும் பேனர்களை அதிரடியாக அகற்றினர். மேலும், இனி கட்சி பேனர்கள் வைத்தாலோ, சுவர் விளம்பரம் செய்தாலோ கலெக்டர் அலுவலகம் அனுமதியின்றி வைக்கக்கூடாது எனவும் எச்சரித்தனர்.

பறக்கும் படை தயார்

சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலர், எஸ்ஐ தலைமையிலான 2 போலீசார் மற்றும் டிரைவர் என 5 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் 24 மணி  நேரமும் இயங்கும் வகையில் தலா 8 மணி நேரத்தில் இயங்கும் 3 பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பறக்கும் படையினரின் வாகன சோதனையும் துவங்கியுள்ளது. இதனால் பணம் எடுத்து செல்வோர், அதற்கான ஆதார  ஆவணங்களையும் உடன் எடுத்துவர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

Related Stories: