ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று மாசி மகத்தை முன்னிட்டு  ஸ்ரீதலசயன பெருமாளின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து கடலில் நீராடினர். மாமல்லபுரம் கடற்கரையில் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில், நேற்று காலை மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தலசயன பெருமாளை தரிசித்து, கடலில் நீராடி வழிபட்டனர். மேலும், தங்களது  குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுவதற்காக, மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்கள் ஒன்றுகூடி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரத்தில் உள்ள கோயில் திருக்குளத்தில்   ஸ்ரீதலசயன பெருமாள்,  தேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலித்தார். அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா  கோஷத்துடன் பெருமாளை மனமுருக வழிபட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில்  ஸ்ரீதலசயன பெருமாள், ஆதிவராக பெருமாளுடன் கருட வாகனத்தில் வீதியுலா வந்து, மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்றடைந்தார். பின்னர் சக்கரத்தாழ்வாருடன்  ஸ்ரீதலசயன பெருமாள் கடலில்  புனிதநீராடினார். இதை தொடர்ந்து அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதன்பின்னர், பக்தர்கள் கடலில் நீராடி பெருமாளை வழிபட்டனர். இதையடுத்து, பஸ் நிலையம் வழியாக மீண்டும் தலசயன பெருமாள் வீதியுலாவாக கோயிலை  சென்றடைந்தார். மாமல்லபுரத்தில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கென தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் இருளர் இன மக்கள் கடந்த 2 நாட்களாக மாமல்லபுரத்தில் தங்கி மாசி மக தீர்த்தவாரி  உற்சவ ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

நேற்று காலை கடலில் குளித்து, மணலில் செய்த கன்னியம்மன், கடல் கன்னி, சப்த கன்னிகளை இருளர் இன மக்கள் ஒன்றுகூடி வழிபட்டனர். இதையடுத்து கன்னியம்மனிடம் குறி கேட்டு, ஏற்கனவே நிச்சயித்த திருமணம், மஞ்சள்நீராட்டு  விழா, காது குத்து, மொட்டை அடித்தல் உள்பட பல்வேறு சுபநிகழ்ச்சிகளை செய்தனர்.

Related Stories:

>