ஆவண காப்பகங்களாக மாறிய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் 2017ல் 1,800 பேருக்கு மட்டுமே அரசு வேலை: வேலை தேடுபவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களில் 1800 பேருக்கு மட்டுமே 2017ம் ஆண்டு வேலை கிடைந்துள்ளது. இதனால் பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருப்பவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி படிப்பு முடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி மற்றும் உயர் கல்வி முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் பலருக்கு படித்த படிப்புக்கான வேலை கிடைப்பது இல்லை. இதனால் கிடைத்த வேலையை ெசய்து வருகின்றனர். பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் கூட குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருகின்றனர். ஆனால், இவர்களில் பலர் வருடம் தவறாமல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களின் பதிவை புதுப்பித்து வருகின்றனர். இவ்வாறு பதிவு புதுப்பிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் எந்த பணியும் கிடைப்பது இல்லை. ஒரு காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் பணி கிடைத்து விடும் என்ற நிலைமாறி, தற்போது சாகும்வரை வேலைேய கிடைக்காது என்ற நிலை உருவாகி விட்டது.

2015ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் வராத துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு  பட்டியல் பெற்றப்பட்டு அதன்படி காலி பணி இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், அதன் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. அனைத்து துறைகள், அரசின் கீழ் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பொது அறிவிப்பு வெளியிட்டு காலி இடங்களை நிரப்ப தொடங்கின. குறிப்பாக, எந்த தேர்வும் இல்லாமல் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் இடங்கள் கூட பொது அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்பட்டது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனது. வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணி கிடைத்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே உள்ளது.

இதன்படி, கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 8800 ஆயிரம் பேருக்கு பணி கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கை 2015ம் ஆண்டு 7700 ஆக குறைந்துள்ளது. 2016ம் ஆண்டு 6200 பேருக்கு மட்டுமே பணி கிடைந்துள்ளது. தொடர்ந்து, 2017ம் ஆண்டு இந்த எண்ணிக்கை பல மடங்கு குறைந்து விட்டது. 2017ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 81,30,025 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்து இருந்தனர். இவர்களில் 18 முதல் 57 வயது வரை இருந்தவர்கள் 61,02,702 பேர். 18 வயதிற்கு குறைவானவர்கள் 20,22,579 பேர். 57 வயதிற்கு மேற்பட்டவர்கள் 4,744 பேர். இவர்களில் வெறும் 1800 பேருக்கு மட்டுமே 2017ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலை கிடைத்துள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கானல் நீராகி வருகிறது. இதனால் படித்து விட்டு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

எல்லாம் அவுட் சோர்சிங்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான காலி இடங்கள் எல்லாம் அவுட் சோர்சிங் முறையில் தனியார் நிறுவனம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஒரு தொழிலாளி பல ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்ற வேண்டிய நிலை உருவாகிறது. இதனால், பணி நிரந்தரம் என்பதே காணாமல் போகும் நிலை உருவாகி உள்ளது.

விளையாடும் லஞ்சம்

வாரியம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி இடங்கள் அறிவிப்பு வெளியிட்டு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இவற்றிலும் லஞ்சம் புகுந்து விளையாடுகிறது. ஒரு பதவிக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்தால்தான் பணி கிடைக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது.

2021ல் காத்திருப்பவர்கள்

வயது    எண்ணிக்கை     

18க்கு கீழ்    17,27,783

19-23    12,47,660

24-35    22,77,148

36-57    10,93,879

58க்கு மேல்    8,788

மொத்தம்    63,55,258

Related Stories: