வீட்டுக்கு விளக்காவேன்; நாட்டுக்கு தொண்டனாவேன் மக்கள் கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாவேன்: காஞ்சிபுரம் கரசங்கால் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “நான் வீட்டுக்கு  விளக்காவேன். நாட்டுக்கு தொண்டனாவேன். மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக  இருப்பேன். மக்கள் கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாவேன்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் - படப்பை-கரசங்காலில் நடந்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடியப் போகிறது. இதுவரை அவர்கள் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியப் போகிறது என்பதால் தினந்தோறும் ஏதோ திட்டம் தொடங்குவதைப் போல நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவற்றுக்கு நிதி ஒதுக்கினார்களா? இல்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே விஷயம் கடன் வாங்குவது. கடன் வாங்குவதில் சாதனை செய்துள்ளது பழனிசாமி அரசுதான்.

தமிழகத்தின் கடன் தொகை 5 லட்சம் கோடியாக ஆகிவிட்டது. 2001-06 அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது தமிழகத்தின் கடன் தொகை 57 ஆயிரம் கோடி ரூபாய். திமுக ஆட்சியில் 2006-11ம் ஆண்டில் 44 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டது. அதாவது, ஆண்டுக்கு சுமார் 9 ஆயிரம் கோடிதான் கடன் வாங்கப்பட்டது. அதாவது திமுக ஆட்சி முடியும் போது இருந்த கடன் தொகை 1 லட்சம் கோடி. இந்த பத்தாண்டு காலத்தில் மொத்தம் 5 லட்சம் கோடியாக ஆக்கிவிட்டார்கள். இப்படி கடன் வாங்கினார்களே, தமிழ்மக்களுக்கு ஏதாவது நன்மையைச் செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. கடன் வாங்கி பணத்தை கஜானாவில் சேர்த்து கொள்ளையடித்துள்ளார்கள். இதுதான் நடந்துள்ளது. நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான திட்டமிடுதலை இந்த அரசு செய்ததா என்றால் அதுவும் இல்லை. பினாமிகளுக்கு, உறவினர்களுக்கு டெண்டர்களை கொடுப்பதற்காக எந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டுமோ அதை மட்டும் செய்துள்ளார்கள். எந்த தரப்பினராவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மொத்தத்தில் தமிழ்நாட்டில் எந்தத் தரப்பும் நிம்மதியாக இல்லை.

 இந்த பின்னடைவில் இருந்து தமிழகத்தை சரி செய்தாக வேண்டும். இந்த ஊழல் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பலம் திமுகவுக்கு மட்டுமே உண்டு. தன்னுடைய ஆட்சியின் மாபெரும் சாதனையாக குடிமராமத்துப் பணிகளை பழனிசாமி சொல்கிறார். ‘வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் ஆனதால்தான் இது சாத்தியம்’ என்று பழனிசாமி தன்னைத் தானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்கிறார். குடிமராமத்து என்ற பெயரால் கொள்ளையடிக்கும் திட்டம்தான் அந்தத் திட்டம். பில் போட்டு பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். மண்ணை அள்ளுவதாகச் சொல்லி பணத்தை அள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். குடிமராமத்து என்றால் ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள், பாசனக் கால்வாய்களை முழுக்க தூர்வாரி நீர் வருகைக்கு தயார் படுத்தி வைக்க வேண்டும். இதுவரைக்கும் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் குடிமராமத்து பணிகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கிறது. அப்படிச் சொல்லி கணக்கு எழுதி இருக்கிறார்கள். அதுதான் உண்மை. தூர் வாருவதற்காக மணல் எடுக்கவில்லை, மணல் கொள்ளைக்காக  மணல் எடுக்கப்படுகிறது. இதுதான் உண்மை.

விவசாயி, விவசாயி என்று சொல்லி இதைத்தான் பழனிசாமி செய்து கொண்டு இருக்கிறார். பிரதமர் மோடி ஆரியத்தை புகுத்த நினைப்பவர். நாங்கள் அதனை திராவிடத்தால் தடுத்துக் கொண்டு இருப்பவர்கள். இந்த மோதல் என்பது காலம் காலமாக நடந்து வரும் மோதல்தான். அதற்காக திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் மோடி பேசுவது, அதுவும் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு பேசுவது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடியாக இருந்தாலும்-முதலமைச்சர் பழனிசாமியாக இருந்தாலும் பேசுவார்கள். செய்யமாட்டார்கள். திமுக சொன்னதைச் செய்யும். செய்வதைத்தான் சொல்லும். மு.க.ஸ்டாலின் ஆகிய நான் வீட்டுக்கு விளக்காவேன். நாட்டுக்கு தொண்டனாவேன். மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன். மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாவேன். இது அண்ணாவின் மீது ஆணை. கலைஞர் மீது ஆணை. மே மாதம் முதல் இதனை நேரடியாக உணர்வீர்கள். திமுக ஆட்சி மலரும். உங்கள் கவலைகள் யாவும் தீரும். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் வன்னியர்களுக்கு முறையான இடஒதுக்கீடு

படப்பை அருகே கரசங்கால், துண்டல் கழனி, அண்ணா திடலில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 6 தொகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர், மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘எம்பிசி ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதாக அதிமுக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான அரசாணைகூட அவர்களால் போட முடியாது. திமுக மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதாக கூறும் அதிமுக, இன்று வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு என அனைத்து மக்களுக்கும் அல்வா கொடுத்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் வன்னியர்களுக்கு முறையான இடஒதுக்கீடு வழங்கப்படும்’’

என்றார்.

Related Stories: