திடீரென மூடப்படுவதாக தனியார் பள்ளி அறிவிப்பு: மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல் போராட்டம்: கல்வித்துறை அதிகாரிகளை முற்றுகை

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கூட்டுச்சாலை மடுவாங்கரை பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது.  இங்கு, எல்கேஜி  முதல் பிளஸ் 2 வரை 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில், சிபிசிஎஸ்சி பாடதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இப்பள்ளி, இந்தாண்டுடன் மூடப்படுவதாக, மாணவர்களின் பெற்றோர்களுக்கு, கடந்த ஒருவாரமாக தகவல்கள் வந்தன. இதனால் அவர்கள், பள்ளிக்கு சென்று, விவரம் கேட்டபோது, எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை, முன்னறிவிப்பின்றி பள்ளியை மூடுவதாக தகவல் கிடைத்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் 100க்கு மேற்பட்டோர் பள்ளிக்கு சென்று, அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் எவ்வித பதிலும் அளிக்காததால், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர்,  ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் - கிளாய் கூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து,  ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு, பள்ளி வளாத்துக்கு வந்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அங்கு சென்றனர். அவர்களை, முற்றுகையிட்ட பெற்றோர்கள், பள்ளியை தொடர்ந்து செயல்பட  நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீரென பள்ளியை மூடினால், எங்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்க்க முடியும். ஏற்கனவே, மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என அரசு கூறிவிட்டது. இதனால், பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்க்க இடம் கிடைக்காது. எனவே, இந்த பள்ளி தொடர்ந்து இயங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அவர்களை சமரசம் செய்த அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளியில் நிதி பற்றாக்குறை இருப்பதாகவும், போதிய வருவாய் இல்லாததாலும் மூடப்படுபவதாக, பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இதுசம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறி, அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

Related Stories:

>