இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்: சென்னை அரசு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது: இன்று சொந்த ஊரில் உடல் நல்லடக்கம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (88), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையில் காலமானார். இவர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் டேவிட், நவமணி தம்பதிக்கு 4வது மகனாகப் பிறந்தவர். 1932 மே 18ம் தேதி பிறந்தார். சிறந்த பேச்சாளர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இண்டர் மீடியட் சேர்ந்த போதே 1953ம் ஆண்டு கட்சியிலும் சேர்ந்தவர். இவருக்கு டேவிட் ஜவஹர் என்ற மகனும், அருணா, பிரேமா ஆகிய மகள்களும் உள்ளனர். 1983ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை மாநிலச் செயலாளராக இருந்தார். 3 முறை மாநில செயலாளராக இருந்தார். சட்ட மன்றத்துக்கு 6 முறை, நாடாளுமன்றத்துக்கு 3 முறை என்று மொத்தம் 9 தேர்தல்களில் போட்டியிட்ட தா.பாண்டியன் ஒருமுறை கூட தன் கட்சிச் சின்னத்தில் வென்றதில்லை.

ஆனால், தனிக்கட்சி நடத்தி வந்த காலகட்டத்தில் வடசென்னையில் கை சின்னத்தில் போட்டியிட்டு இருமுறை எம்.பி ஆகியிருக்கிறார். 1989, 1992 ஆகிய இருமுறை வடசென்னையில் இருந்து எம்பியானார். சிறந்த மொழிபெயர்ப்பாளர். ராஜிவ் காந்தி, பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட போது அருகில் இருந்த தா.பாண்டியனும் படுகாயமடைந்தார். மீண்டும் அரசியலில் தீவிரமாக களம் இறங்கினார்.மேலும் ஐககவை 2000ல் கலைத்துவிட்டு தாய்க் கட்சியில் மீண்டும் இணைந்தார். 2005ல் கட்சியின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 10 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதை ெதாடர்ந்து அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு சிறுநீரக பிரச்னை, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள், ரத்த அழுத்தம் இருந்தது. இதனால் அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர்.

நேற்று காலை 9.58 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் அண்ணாநகர், டிவிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அதன்பிறகு தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.  அப்போது திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும், ெபாருளாளருமான டி.ஆர்.பாலு, அமைப்பு ெசயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிறகு இரவு கட்சி அலுவலகத்தில் இருந்து அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளை மலைப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  அங்கு இன்று பிற்பகல் 2 மணி வரை அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு பிற்பகல் 2 மணிக்கு மேல் கீழ்வெள்ளை மலைப்பட்டியில் உள்ள டேவிட் பண்ணை தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Related Stories: