2011 சட்டசபை தேர்தலை போல வாக்குப்பதிவு, எண்ணிக்கை இடையே மீண்டும் நீண்ட இடைவெளி

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் சுமார் 26 நாட்கள் இடைவெளி உள்ளது. இதேபோல, கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலிலும் நடந்தது. அதாவது, ஏப்ரல் 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மே 13ம் தேதி வாக்கு எண்ணப்பட்டது. சுமார் ஒரு மாதம் காலம் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலும் இதேபோல்தான் நடந்தது. ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதன் முடிவு மே 23ம் தேதி வெளியானது. மொத்தம் 35 நாட்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த தேர்தலில் தேனி மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது.

அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் கழித்து வாக்கு எண்ணிக்கை நடந்தால் ஒவ்வொரு கட்சியினரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு பணிக்காக இருக்க ேவண்டிய நிலை ஏற்படும். இதனால், தேவையில்லாத செலவு தான் ஒவ்வொரு கட்சிக்கும் ஏற்பட்டது. இதுதவிர, வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். உள்ளூர் போலீசார், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்படுவது வழக்கம். அதற்கும் அரசுக்கு அதிக செலவு செய்து வந்தது. இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சட்டசபை தேர்தலுக்கும் சுமார் 26 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டசபை ேதர்தல் மே 16ம் தேதி நடந்தது. தொடர்ந்து 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: