நக்சல்களின் கண்ணிவெடி தாக்குதலில் வீரமரணம் எய்திய தமிழக ராணுவ வீரர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் : முதல்வர் பழனிசாமி

சென்னை : சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகள் நச்சல் பாதிப்புக்குள்ளானவை. இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி) படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் சோனேபூர் காவல் நிலைய  பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது குறிப்பிட்ட பகுதியில் நக்சல்கள் வைத்திருந்த கண்ணிவெடி தாக்குதலில் வீரர் எல்.பாலுச்சாமி இறந்தார். மற்றொரு வீரர் படுகாயமடைந்தார். அதேபோல், சோன்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள குகூர் கிராமத்திற்கு  அருகே போலீஸ் குழுக்கள் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காங்கர் உசெண்டி  என்ற வீரர் இறந்தார்.

இதனிடையே சத்தீஷ்கரில் நக்சல்களின் கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பாலுச்சாமி மதுரையைச் சேர்ந்தவர் ஆவார். மதுரையில் உள்ள பொய்கைப் பட்டி என்ற கிராமத்தைச்சேர்ந்த பாலுச்சாமி, இந்தோ திபெத்திய பாதுகாப்பு எல்லைப் படையில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த பாலுச்சாமிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வீர மரணம் அடைந்த பாலுச்சாமியின் உடல் விமானம் மூலம் பெங்களுரூ கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தரை மார்க்கமாக பொய்கைப்பட்டிக்கு வந்து சேரும்.

இந்த நிலையில் வீரர் பாலுச்சாமியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடனான மோதலில் மதுரை-பொய்கைக்கரைப்பட்டியை சேர்ந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர் திரு.பாலுச்சாமி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.வீரமரணம் எய்திய திரு.பாலுச்சாமி அவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>