ஆல் பாஸ் அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஆற்காடு : ஆற்காட்டில் அரசு பள்ளி மாணவர்கள் நேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. மேலும் ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வந்தது. கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்ததால் சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து 9, 10, 11ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று  அறிவித்தார்.

ஆனால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகை தரவேண்டும் என்றும் அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆல் பாஸ் என அறிவித்ததை கொண்டாடும் வகையில் ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று மாலை பள்ளிக்கு முன்பு திரண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதேபோல் ஆற்காடு தாலுகாவில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் மாணவர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Related Stories:

>