மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் 2-ம் அலை கொரோனா அதிகரிப்பு: பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

சென்னை: அண்டை மாநிலங்களில் 2-ம் அலை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் 2-ம் அலை கொரோனா அதிகரித்து வருகிறது. இருந்தாலும், தமிழகத்தில் மக்கள் அலட்சியமாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது என கூறினார். 2-ம் அலை தமிழகத்தில் பரவாமல் தடுக்க, தமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கேரளா-தமிழக எல்லைகளில் மட்டும் 26 இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் சோதனைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ரயில், பஸ் உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும் மக்கள் முககவசம் அணிந்துள்ளதை உறுதி செய்ய, அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2-ம் அலை கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கூறினார். மேலும் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் கட்டாயம் வீட்டில் தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். எனவே ஒரே பகுதியில் 2 பேருக்கு மேல் கொரோனா கண்டறியப்பட்டால் அந்த பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். அறிகுறி எதும் தெரிந்தால் உடனே கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: