திமுக, காங்கிரஸ் புறக்கணித்த நிலையில் பேரவைக்கு குறைந்த எண்ணிக்கையில் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்

சென்னை:  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை திமுக, காங்கிரஸ் புறக்கணித்த நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அதிகம் பேர் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 10 மணி தொடங்கியதும் கடந்த 10ம் தேதி மறைந்த சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தவர்களுக்கும், கடந்த 7ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து எம்எல்ஏக்களும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தை திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதனால் ஒரு பக்கம் இருக்கைகள் முழுவதும் காலியாக கிடந்தது. அதேநேரம் சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 12 அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் 35 பேர் மட்டுமே அவையில் இருந்தனர். இதனால் பேரவையில் மொத்தமுள்ள 234 இருக்கையில் சுமார் 175 இருக்கைகள் காலியாகவே இருந்தது.

இதுகுறித்து விசாரித்தபோது, கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள சில அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் சென்று விட்டதாக கூறப்பட்டது. குறிப்பிட்ட அமைச்சர்கள் இல்லாததால், கேள்வி நேரத்தின்போது 5  கேள்விகள் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆனாலும், நேரம் செல்ல செல்ல சில அமைச்சர்களும், அதிமுக உறுப்பினர்களும் அவைக்கு வந்தனர்.

நிதியமைச்சர் இல்லாமல் நிதிநிலை அறிக்கை மீது விவாதம்

2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 23ம் தேதி (செவ்வாய்) தாக்கல் செய்தார். 24ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் இல்லை. நேற்று நிதி நிலை அறிக்கை மீது பொது விவாதம் நடந்தது. விவாதத்தின் மீது

அதிமுக உறுப்பினர்கள் செம்மலை, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்டோர் பேசினர். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று முழுவதும் அவை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை. அவர் கலந்து கொள்ளாமலே நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் உறுப்பினர்கள் நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>