அதிமுக நிர்வாகிகள் நியமன விவகாரம் ஓபிஎஸ், இபிஎஸ் ஐகோர்ட்டில் மனு தாக்கல்: ஏப்ரல் மாதம் விசாரணை

சென்னை: சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த சுந்தரம் என்பவர் அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்த உத்தரவிட கோரியும், நிர்வாகிகள் நியமனத்தை ரத்து செய்யக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டுமென கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான அணியே உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

வேறு ஏதோ உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதிமுக தலைவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் பெறப்பட்டுள்ளது. கட்சியின் உறுப்பினராகவே இல்லாத மனுதாரர் இந்த வழக்கை தொடர அடிப்படை உரிமை இல்லை. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், 8 வாரங்களில் பதிலளிக்கும்படி மனுதாரர் சுந்தரத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: