ஏழை, நடுத்தர மக்களுக்கு அடுத்த அடி...! ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 விலை உயர்வு

டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் ஒரே மாதத்தில் 100 ரூபாய் அதிகரித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை என மாற்றப்பட்டு வருகிறது. ஆனால், சமீபகாலமாக மாதத்திற்கு 2 முறை சிலிண்டர் விலையை உயர்த்தி வருவது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த மாதத்தில் 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதம் 4-ம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் 15-ம் தேதி மேலும் 50 ரூபாய் அதிகரித்து 785 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டரின் விலை 810 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் 3 முறை சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதுடன் மானியமும் வங்கிகளில் முறையாக வரவு வைக்கப்படாததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம் வரிசையில் கேஸ் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சிலிண்டர் விலையேற்றம் பற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வரும் மாதங்களிலும் விலையேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது,’’ என்றனர்.

டிசம்பரில் 2 முறை அதிகரிப்பு

கடந்த டிசம்பர் மாதம் வீட்டு உபயோக மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை 2 முறை ஏற்றப்பட்டது. டிசம்பர் 1ம் தேதியும், 15ம் தேதியும் தலா 50 என 100 விலையேற்றம் செய்தனர். அதுபோலவே நடப்பு மாதம் 4ம் தேதி 25ம், 15ம் தேதி 50ம், இன்று மேலும் 25-ம் என 100 ரூபாய் அதிகரித்துள்ளது.

Related Stories: