ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

சென்னை: ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார். அதன்படி சென்னை, காமராஜர் சாலை ஜெயலலிதா வளாகத்தில் நடந்த விழாவில், மகிழம் மரக்கன்றுகளை நட்டு, திட்டத்தை துவக்கி வைத்தார். வனப்பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், பூங்காக்களிலும், பெரிய அளவிலான குடியிருப்புகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும்.  ஆல், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும்.

2021ம் ஆண்டிற்கான பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதை திருவள்ளூர் மாவட்டம், பூண்டி வட்டாரம், வேளகாபுரம், மேட்டுக் காலனியைச் சேர்ந்த தே.நர்மதாவுக்கு முதல்வர் எடப்பாடி நேற்று வழங்கி பாராட்டினார்.இவர், தனது கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினராகவும், கிராம முன்னேற்ற குழு உறுப்பினராகவும் இருந்து சேவை செய்து வருகிறார். மேலும், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தனது கிராமத்தை, குழந்தை நேய கிராமமாக மாற்ற பெரும் முயற்சி மேற்கொண்டு வருவதுடன், பெற்றோர் மத்தியில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.  

பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட தீவிர செயல்பாடுகளை மேற்கொண்டு, சிறப்பாக பணியாற்றி வரும் 3 மாவட்ட நிர்வாகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் கே.மேக்ராஜுக்கு தங்க பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும், இரண்டாம் இடத்திற்கான மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தின விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட தர்மபுரி மாவட்ட ஆட்சி தலைவர் எஸ்.பி.கார்த்திகாவுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும், மூன்றாம் இடத்திற்கான மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தின விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரிக்கு வெண்கல பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை முதல்வர் எடப்பாடி நேற்று வழங்கினார்.விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சரோஜா, எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>