சிஏஏ போராட்டம் வன்முறையில் முடிந்து ஓராண்டு நிறைவு: 775 எப்ஐஆர்; 1,825 பேர் கைது; 303 வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்...!!!

புதுடெல்லி: டெல்லியில் நடந்த சிஏஏ போராட்டம் வன்முறையில் முடிந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இச்சம்பவம் தொடர்பாக 775 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, 1,825 பேர் கைதாகி உள்ளனர். இன்றைய நிலையில் 303 வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கடந்தாண்டு போராட்டங்கள் நடந்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு பயணம் செய்த பிப். கடைசி வாரத்தில் சிஏஏ போராட்டம், கலவரமாக மாறியது.

 சர்வதேச  ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலவரம் தூண்டப்பட்டதாகவும், உலகளவில் இந்தியாவுக்கு எதிரான  மனநிலையை தீவிரப்படுத்தவும், கலவரத்தின் பின்னணியில் சர்வதேச சதி இருந்ததாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன. 2020 பிப்ரவரி 23 முதல் 26ம் தேதி வரை நடந்த இந்த கலவரத்தால் பெரும் வன்முறைகள் வெடித்தன. நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. கிட்டதிட்ட 53 பேர் வன்முறையால் இறந்தனர். கடந்தாண்டு ஜூலை 13ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ெடல்லி காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, கொல்லப்பட்டவர்களில் 40 முஸ்லிம்களும் 13 இந்துக்களும் அடங்குவர்.

மேலும், இச்சம்பவத்தில் 581 பேர் காயமடைந்தனர். இருந்தும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கொேரானா ஊரடங்கு மார்ச் மாதம் அமலுக்கு வந்ததால், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

போராட்டத்தின் தொடர்ச்சியாக நடந்த கலவர சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் மொத்தம் 755 எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். கிட்டதிட்ட 1,825  பேரை ேபாலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க 3 சிறப்பு புலனாய்வு குழுவிடம் விசாரணைக்காக 60 வழக்குகள் ஒப்படைக்கப்பட்டன. கலவரக்காரர்களை அடையாளம் கண்டறிய வீடியோ பகுப்பாய்வு, சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக சிறப்பு தடயவியல் குழுவும் அமைக்கப்பட்டது.

கலவரத்தால் சொத்துகளை இழந்தோருக்கு இழப்பீடு தருவதற்காக ஓய்வு  பெற்ற நீதிபதி எஸ்.என்.கவுர், உரிமைகோரல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.  அதன்படி, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 2,000 உரிமைகோரல் விண்ணப்பங்கள்  பெறப்பட்டுள்ளன. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ெடல்லி அரசு இதுவரை ரூ.26  கோடி இழப்பீடு வழங்கியுள்ளது. இன்றைய நிலையில் டெல்லி கலவர சம்பவம் நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், 1984ம் ஆண்டு நடந்த கலவரங்களில் கூட 755 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்த சம்பவத்தில் ஏகப்பட்ட எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு அதிகபட்ச கைதுகளும் நடந்துள்ளன.  

இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.வஸ்தவா கூறுகையில், ‘கலவரக்காரர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ெமாபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களிலிருந்து குறிப்பிட்ட தரவுகள் மீட்கப்பட்டன. வன்முறை நடந்த பகுதியில் அவர்களின் பங்களிப்பு குறித்த தரவுகளும் சேகரிக்கப்பட்டன. டிரோன் மேப்பிங் முறையில் சில தடயங்கள் ேசகரிக்கப்பட்டது. பலியானவர்களில் அடையாளம் தெரியாதவர்களின் டிஎன்ஏ சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. எரிந்த வாகனங்கள் மற்றும் கலவரக்காரர்களின் வாகனங்களை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரத்யேக தரவுத்தளம் தயாரிக்கப்பட்டது.

775 சிசிடிவி மற்றும் வீடியோவில் இருந்து கண்டறியப்பட்ட முக அடையாளங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 231 பேரை அடையாளம் கண்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். கலவரம் தொடர்பாக டெல்லியின் 11 காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கலவரம் தொடர்பாக மொத்தம் 755 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 400 வழக்குகள் காவல்துறையினரால் தீர்க்கப்பட்டுள்ளன. 349 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 303 வழக்குகளின் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories:

>