ராதாபுரம் தேர்தல் வழக்கு வாக்கு எண்ணிக்கை முழு விவரத்தையும் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ராதாபுரம் தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பாக எண்ணி முடிக்கப்பட்டுள்ள வாக்கு விவரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் எம்.அப்பாவுவும், அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ்.இன்பதுரையும் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகளையும் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து, 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடைசி மூன்று சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை தாக்கல் செய்ய தெரிவித்து, அதனை எண்ணி முடித்துள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அ.தி.மு.கவின் இன்பதுரை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஹெச்.ராய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதத்தில், “ராதாபுரம் தொகுதி தொடர்பான கடைசி மூன்று சுற்று மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. இதில் 98 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றுள்ளார். அதற்கான விவரங்கள் அடங்கிய சான்றிதழில் இரு வேட்பாளர்களுமே கையெழுத்து போட்டுள்ளனர். அதனால் எண்ணிக்கை முடிவை உடனடியாக வெளியிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இதில் தமிழகத்தில் விரைவில் சட்டம்ன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து வாதங்களை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், ‘ராதாபுரம் தொகுதி தொடர்பாக நடத்தி முடிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கொண்ட முழு அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,’ என சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்து, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: