இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்த சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

சென்னை: இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்த 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் கூறினார். தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடத்துவதற்கு எத்தனை நாட்கள் பேரவை கூட்டத்தொடரை நடத்தலாம் என்பது குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டதால், கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

பின்னர் சபாநாயகர் தனபால் நிருபர்களிடம் கூறியதாவது: 24ம் தேதி (இன்று) பேரவை கூட்டம் இல்லை. 25ம் தேதி (வியாழன்) காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கியதும் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார், விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தின் காரணமாக உயிரிழந்தவர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதை தொடர்ந்து 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் தொடங்கும். 26ம் தேதி இரண்டாவது நாளாக இடைக்கால நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் நடைபெறும். 27ம் தேதி (சனி) இடைக்கால நிதி அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை. 2021-22ம் ஆண்டின் செலவினங்களுக்கான முன்பண மானிய கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு. சட்டமுன்வடிவு அறிமுகம் செய்வது, நிறைவேற்றுதல் மற்றும் ஏனைய அரசினர் அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: