மார்ச் 2ம் தேதி முதல் இந்திய கடல்சார் மாநாடு 2,000 கோடி முதலீடு கிடைக்க வாய்ப்பு: சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் தகவல்

சென்னை: இந்திய கடல்சார் மாநாடு மூலம் 2000 கோடி முதலீடு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது: இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், துறைமுகம் சார்ந்த தொழில்துறையை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்திய கடல்சார் உச்சி மாநாடு மார்ச் 2, 3, 4 ஆகிய தேதிகளில் காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளது. மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர் வழிப்பாதை துறை அமைச்சகம் நடத்தும் இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மாநாட்டில், பல்வேறு நாடுகளில் இருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ள இருப்பதால், அந்தந்த நாட்டின் முதலீடுகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டு, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம்.குறிப்பாக சென்னையை பொறுத்தவரையில், பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, சென்னை துறைமுகம் 15க்கும் அதிகமான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 2 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக வில்லிபுத்தூர் அருகே மப்பேடில் பல்முனைய போக்குவரத்து முனையம் அமைப்பதற்காக தமிழக அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியோருடன் இணைந்து துணை நிறுவனத்தை ஏற்படுத்தி உள்ளது. 1400 கோடி முதலீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது சென்னை -பெங்களூரு விரைவு நெடுஞ்சாலையை ஒட்டி அமையவுள்ளது. இதுதவிர்த்து சென்னை ஐஐடியுடன் ஆராய்ச்சிக்காக 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவை போடப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை துறைமுகத்திலிருந்து காரைக்காலுக்கு பயணிகள் சேவையை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக புதுச்சேரி அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மதுரவாயல் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்து விட்ட நிலையில் அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: