அருங்காட்சியம், அறிவுசார் பூங்கா திறப்பு: ஜெயலலிதா நினைவிடத்தை இன்று முதல் பொதுமக்கள் பார்க்கலாம்

சென்னை: மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் பீனிக்ஸ் பறவை மற்றும் இரண்டு பக்கத்தில் 21 மீட்டர் உயரத்தில் இறக்கை வடிவமைப்பு, அறிவுசார் பூங்கா, அருங்காட்சியகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை கடந்த மாதம் 27ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதைதொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வந்தது. இதில் அவரது வாழ்க்கை காட்சி படுத்தப்பட்டுள்ளது. மேலும்,  பார்வையாளர்கள் தொடு திரையின் மூலம் ஜெயலலிதாவுடன் பேசலாம். இதற்காக, ஹாலோ கிராம் வீடியோ தொழில்நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஜெயலலிதாவிடம் கேட்ட கேள்விகளுக்கு, அவர்கள் பதில் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடர்பாக 8 டிஜிட்டல் வீடியோ காட்சிகளை காணலாம். ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதில், பல்வேறு திட்டங்கள் தொடர்பாக 2டி அனிமேஷன் வீடியோக்கள் இடம் பெறுகின்றன. 50 பேர் அமரும் வசதியுடன் கூடிய ஆடிட்டோரியம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவின் சிலிக்கான் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. தத்தரூபமாக வடிவமைக்கப்பட்ட இந்த சிலைகள் உடன் ஜெயலலிதாவுடன் செல்பி எடுக்கலாம். இப்பணிகள் அனைத்தும் கடந்த 20ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று காலை 10.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா திறந்து வைக்கிறார். தொடர்ந்து, அன்று முதல் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories: