தேர்தல் ஆணையம் விளக்கம் மேற்கு வங்கத்துக்கு கூடுதலாக மத்திய படை அனுப்புவது ஏன்?

புதுடெல்லி: மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் அதிகமான மத்திய படைகளை அனுப்பியது ஏன் என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய 5  மாநிலங்களுக்கு ஏப்ரல், மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பாதுகாப்பு பணியில் 225 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 125 கம்பெனி  படையினர் மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மற்ற 4 மாநிலங்களை சேர்த்தே 100 கம்பெனி மத்திய படை களமிறக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கு வங்கத்திற்கு மட்டும் ஏன் கூடுதல் படைகள் அனுப்பப்படுகிறது  என பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்தது. அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களில் உள்ள பகுதிகளை, குறிப்பாக பதற்றமான பகுதிகளை நன்கு அறிவதற்கும், கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் மத்திய ஆயுத படைகள் முன்கூட்டியே அனுப்பப்படுவது வழக்கம்.

அப்போதுதான், அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பில் இருந்து நம்பகமான தகவல்களை திரட்டி நிலவரத்தை முன்கூட்டியே ஆய்வு செய்ய முடியும். இந்த நடைமுறை கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து பின்பற்றப்படுகிறது. 2019ம் ஆண்டு  மக்களவை தேர்தலின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதேப்போல்தான் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.  தற்போது கூட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களான அசாம், கேரளா, தமிழகம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரிக்கு மத்திய ஆயுதப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: