அங்கீகாரம் இல்லாத கல்லூரி நடத்தி கட்டணம் வசூல் கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை கோரி மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாணவன் சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இயங்கி வருவது பெருந்தலைவர் காமராஜர் கடல் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது  குடும்பத்தினருக்கு சொந்தமான ‘கமலம் சம்பந்தம் அழகிரி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை’ சார்பில் இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், முறையான விதிகள் பின்பற்றாததால் 5 ஆண்டு காலத்திற்கு அதன்  அங்கீகாரத்தை நிறுத்தி வைத்து கடந்த ஜனவரி மாதம் கப்பல் போக்குவரத்து பொது இயக்குனர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். மேலும், அங்கீகாரம் ரத்து  செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத கல்வி கட்டணத்தை திருப்பி தர வேண்டும் எனவும் உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.  அதே நேரத்தில், முறையான விதிகளை பின்பற்றாமல் கல்லூரி நடத்தி மாணவர்களிடம் கல்வி கட்டணமாக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாகவும், அதனால் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர்  மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறக்கட்டளைக்கு எதிராக ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவன் ஹரிஹரசுதன் என்ற மாணவர் சார்பிலும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி, மணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணத்தில் 50 சதவீத தொகையை பெற்று தர வேண்டும். இந்த கல்லூரில் படித்தால் தன்னுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக 10  லட்சம் ரூபாய் தர அறக்கட்டளைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மாணவன் மனுவில்  கோரியுள்ளார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: