ஆடு, கோழி இறைச்சி விலை உயர்வால் அமராவதி அணை மீன்களுக்கு கிராக்கி

உடுமலை : ஆடு, கோழி இறைச்சி விலை உயர்வால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் பிடிக்கப்படும் மீன்களுக்கு நாளுக்கு நாள் கிராக்கி அதிகரித்த வண்ணம் உள்ளது.உடுமலை  அருகே அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகள் உள்ளது. இவற்றில் தமிழ்நாடு  மீன்வளர்ச்சி கழகம் மூலம் கட்லா, ரோகு, மிருகால் உள்ளிட்ட மீன்கள்  வளர்க்கப்பட்டு வருகின்றன.

அணையில் வளரும் மீன்களை ஏலம் எடுக்கும்  குத்தகைதாரர்கள் அவற்றை குறித்த விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்வது  வழக்கம்.

கொரோனா காலத்தில் ஆடு, நாட்டுக்கோழி இறைச்சியின் விலை அதிகரிக்க  துவங்கியது.  அது தற்போது வரை அப்படியே நீடிக்கிறது. ஒரு கிலோ ஆட்டிறைச்சி  கிலோ ரூ.700 வரையும், நாட்டுக்கோழி கிலோ ரூ.400 வரையிலும் விற்பனை  செய்யப்படுகிறது. கறிக்கோழி கூட ரூ.200 என விற்பனையாகிறது.

ஐஸ்கட்டிகளில் வைக்கப்பட்ட கடல் மீன்களை விட உயிரோடு பிடித்து உடனே  விற்கப்படும் அணை மீன்களுக்கு சுவை அதிகம் என்பதால் அசைவப்பிரியர்கள்  அணைக்கட்டு மீன்களை வாங்க வரிசை கட்டி நிற்கின்றனர்.குறிப்பாக அமராவதி  அணையில் பிடிக்கப்படும் கட்லா, ரோகு, மிருகால் போன்றவை கிலோ ரூ.160க்கு  கிடைப்பதாலும், ஜிலேபி வகை மீன்கள் ரூ.85க்கு கிடைப்பதாலும் வாரவிடுமுறை  தினங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அணைக்கட்டுக்கு மீன் வாங்க  படையெடுக்கின்றனர்.வார விடுமுறை தினமான நேற்று அமராவதி அணையில் மொத்தம்  350 கிலோ மீன்கள் வலையில் சிக்கின.

இவற்றை 100க்கும் மேற்பட்டோர் நீண்ட  வரிசையில் நின்று பெற்று சென்றனர். ஆடு, மாடு,கோழி இறைச்சியின் விலையை விட  அணை மீன்கள் விலை குறைவாக இருப்பதோடு, ருசியாக இருப்பதாக அவர்கள்  தெரிவித்தனர்.

Related Stories: