கொரோனா தடுப்பூசியை தவிர்க்கும் முன்கள பணியாளர்கள் தொற்றால் பாதித்தால் சிகிச்சைக்கு உதவியோ, விடுமுறையோ கிடையாது!: பஞ்சாப் அரசு அதிரடி..!!

சண்டிகர்: பஞ்சாபில் கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்க்கும் சுகாதார பணியாளர்கள் தொற்றுக்கு ஆளானால் சிகிச்சைக்கு உதவியோ, விடுமுறையோ வழங்கப்படமாட்டாது என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் பரிசோதனைகளை அதிகரிப்பதுடன் தடுப்பூசி பணிகளையும் துரிதமாக மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறையாக கொரோனா தடுப்பு மருந்து போடப்படுகிறது.

முதற்கட்டமாக 3 கோடி மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார், ராணுவத்தினர் போன்றோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள சுகாதார பணியாளர்களே தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானால் அவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் சிகிச்சைக்கு உதவி கிடைக்காது என்றும் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

மேலும் பஞ்சாபில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அனைவரும் இரண்டாவது அலைக்கு போராட தயாராக வேண்டும். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: