பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக-வினர் ஏராளமானோர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய பாஜக அரசானது வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஆளும் அதிமுக, மத்திய பாஜக அரசின் ஆட்சியில் விலையேற்றம் என்பது உச்சத்தை அடைந்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.59-க்கும், டீசல் லிட்டர் ரூ.85.98க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலையேற்றம் வாகன ஓட்டிகளை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. அதேபோல் சமையல் சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75 உயர்ந்துள்ளது. கடந்த 4 ம் தேதி சிலிண்டர் விலையில் ரூ.25 அதிகரித்த நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு மீண்டும் ரூ.50 உயர்ந்து மொத்த விலை ரூ.785 ஆக விற்பனையாகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைத்திடவும், இனி விலை உயராமல் தடுத்திடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்திற்கான அறிவிப்பை கடந்த 17ம் தேதியன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் ஏற்பாட்டில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் சென்னை சைதாப்பேட்டையில் துரைமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Related Stories: