நீங்க எங்க மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல: யோகி ஆதித்யநாத் மீது அகிலேஷ் யாதவ் காட்டம்

லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்கள் மாநிலத்தவர் அல்ல என்று, முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல; அவர் வேறு மாநிலத்திலிருந்து வந்தவர். ஆனால் இங்குள்ள மக்கள் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே அவர் உத்தரபிரதேச மாநில  மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். தற்போதைய பாஜக அரசு மீது மாநில மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியமைக்கும்.

கோரக்பூர், மகாராஜ்கஞ்ச், குஷினகர், தியோரியா, சாந்த்க்பீர் நகர், பஸ்தி, கோண்டா மற்றும் பைசாபாத் மாவட்டங்களில் உள்ள நெல் விவசாயிகளுக்கு எம்.எஸ்.பி (குறைந்தபட்ச ஆதரவு விலை) கிடைக்கிறதா? அதனை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும். நெல்லுக்கு என்ன விலை கொடுத்தீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம். பாஜக அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை நாசமாக்கி உள்ளது. மக்கள் வேலை இழந்துள்ளனர். மூன்று விவசாய சட்டங்களாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

இதற்கிடையில் அகிலேஷ் யாதவின் பேச்சுக்கு பதிலளித்த உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, ‘சிலர் தங்களது தோல்வியை (தேர்தல்) இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் (அகிலேஷ்) ஆட்சி அதிகாரத்தில் இன்னும் இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசுகிறார்’ என்றார்.

Related Stories: