கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக கடுமையான வரி விதித்து பெட்ரோல்-டீசல் விலையை தினமும் ஏற்றி வருகிறது மத்திய அரசு..! பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: மோடி அரசு கார்பரேட் நிறுவனங்களுக்காக பெட்ரோல்-டீசல் மீது கடுமையான வரி விதித்து அவற்றின் விலையை தினமும் ஏற்றி வருகிறது என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விட்ட நிலையில், மீதமுள்ள பகுதிகளில் ரூ.100-ஐ நெருங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.

அதேநேரம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சாதாரண மக்களின் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் மோடி அரசை சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘வாரத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயராத சிறந்த நாட்கள் எவை? என பா.ஜனதா அரசு கூற வேண்டும். ஏனெனில் விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்களுக்கு மீதமுள்ள நாட்கள் அனைத்தும் மோசமான நாட்களாக அமைகின்றன’ என குறிப்பிட்டு இருந்தார். மோடி அரசு கார்பரேட் நிறுவனங்களுக்காக பெட்ரோல்-டீசல் மீது கடுமையான வரி விதித்து அவற்றின் விலையை தினமும் ஏற்றுவதாக குற்றம் சாட்டியுள்ள பிரியங்கா, ஆனால் விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களுக்கான விலையை அளிக்க மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Related Stories: