காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்பை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: ‘காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்’ என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி தலைமையில் 6வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தக்க சமயத்தில் ஊரடங்கு உத்தரவுகளை முறையாக அமல்படுத்தி, கண்காணிப்பு மற்றும் பரிசோதனையை தீவிரப்படுத்த மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் விளங்குவதாக பிரதமரால் பாராட்டப்பட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இந்தியாவிலேயே நல்ல ஆட்சி நிர்வாகத்தை தரும் மாநிலங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்து விருது பெற்றிருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்திலும் அதிகப்படியான பங்களிப்பை அளித்து வருகிறது. காவிரி டெல்டா பகுதிகள் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. தேசிய நீர் விருதில், சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கான மத்திய அரசின் விருதை தமிழகம் பெற்றுள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ், ரூ.1,418 கோடி மதிப்பீட்டில், குளம், ஏரி, கால்வாய் உள்ளிட்ட 6,211 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை, தேசிய நதிநீர் இணைப்புத் திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், கங்கையை தூய்மைப்படுத்தி பாதுகாக்கும், ‘நமாமி கங்கை’ திட்டம் போன்று, காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை தூய்மைப்படுத்தி பாதுகாக்கும் தமிழக அரசின், “நடந்தாய் வாழி காவிரி” திட்டத்திற்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

கல்விக்கு தமிழக அரசு எப்போதும் முன்னுரிமை கொடுத்து வருகிறது. கொரோனா சவாலிலும் கூட கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தினமும் அவர்களுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு அரசின் கல்வி டிவி மற்றும் 10 தனியார் டிவி சேனல்கள் மூலமாக பாடம் கற்பிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தகவல் பகுப்பாய்வு திட்டம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான மையம் ஒன்றையும் தமிழக அரசு கட்டமைத்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: