டெல்லி எல்லையில் 87-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: விவசாயிகளுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பேச்சு

டெல்லி: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாலா பேச்சுவார்த்தை நடத்துகிறார். மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் 3 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் 11 கட்டமாக மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர். டெல்லியில் 87-வது நாளாக போராடி வரும் விவசாயிகள் நாட்டின் பல இடங்களில் போராட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் விவசாயிகள் இணைந்து கண்டன பேரணி நடத்தினர். அப்போது வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனிடையே டெல்லியிலும் குடியரசு தினத்தின் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 200 பேரின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள் சங்கத்தினர் கைது நடவடிக்கை எடுத்தால் போலீசாரை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்துள்ளனர். இதனிடையே டெல்லியில் இயல்பு நிலை திரும்புவது குறித்து விவசாய அமைப்புகளுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Related Stories: