தென்மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவு: காவிரி-தெற்குவெள்ளாறு-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பிப்.21-ல் முதல்வர் பழனிசாமி அடிக்கல்.!!!

சென்னை: காவிரி-தெற்குவெள்ளாறு-குண்டாறு நதிகள் இணைக்கும் திட்டத்திற்கு பிப்ரவரி 21-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். காவிரியில் அதிகமாக வரும் உபரி நீரை கடலில் கலக்க வைப்பதை தடுத்து அந்த நீரை  ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த ஏதுவாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் முக்கியமான திட்டம் காவிரி குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம். இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.14,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகளின்  நீண்ட நாள் கோரிக்கையை நினைவில் கொண்டு, நிதி நிலை அறிக்கையில் முதற்கட்டமாக ரூ.700 கோடியை காவிரி-தெற்குவெள்ளாறு-குண்டாறு நதிகள் இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1 லட்சம்  ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும்.

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 259 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் வெட்டப்படுகிறது. இதில், காவிரி ஆறு செல்லும் கரூர் மாவட்டம் கட்டளையில் இருந்து தெற்குவெள்ளாறு வரை 118 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதல் கால்வாய்  வெட்டப்படுகிறது. 2வது கட்டமாக தெற்குவெள்ளாறு முதல் வைகை வரை 108 வரை கிலோ மீட்டர் நீளத்திற்கும், 3-ம் கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 33 கிலோ மீட்டர் நீளத்திற்கும் கால்வாய் வெட்டப்படுகிறது.

இவ்வாறு வெட்டப்படும் கால்வாய் ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் வைகை நதியை கடந்து செல்கிறது. வெள்ள காலத்தில் கடலில் கலக்கும் நீரை பயன்படுத்தி வறட்சி மாவட்டங்களாக கரூர், திருச்சி,  புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் விவசாயிகள் பயன்பெற உள்ளன.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் குன்னத்தூரில் நாளை மறுநாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  காவிரி-தெற்குவெள்ளாறு-குண்டாறு நதிகள் இணைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ரூ.3,384 கோடியில் காவிரி உபவடிநிலத்தில் நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் முதல்வர் பழனிசாமி அடிக்கல்  நாட்டுகிறார். காவிரி-தெற்குவெள்ளாறு-குண்டாறு நதிகள் இணைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம் தென்மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: