வேலூர் ரேஷன் கடைகளில் சோப்பு வாங்கினால்தான் அரிசி, பருப்பு-ஊழியர்கள் கட்டாயத்தால் மக்கள் வேதனை

வேலூர் : வேலூர் ரேஷன் கடைகளில் குளியல் சோப்பு வாங்கினால்தான் அரிசி, பருப்பு வழங்குவோம் என்று கட்டாயப்படுத்தும் ரேஷன் கடை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசியுடன், பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணை, கோதுமை என அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.

அவ்வப்போது கடுகு, சலவை சோப்பு, வெந்தயம், தேயிலைத்தூள் என சில பொருட்களை வாங்கினால்தான் பிற பொருட்களை வழங்குவோம் என்று கூறி விற்பனை செய்வதுண்டு.இதுதொடர்பாக செய்தி வெளியானதும், இப்பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயமில்லை. விருப்பப்பட்டால் வாங்கலாம் என்று பொது வினியோகத்துறை பெயரளவுக்கு அறிவிப்பு வெளியிடும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் ‘அம்மா’ குளியல் சோப்பு வாங்கும்படி பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சைதாப்பேட்டையை சேர்ந்த கண்மணியம்மாள் என்பவர் கூறும்போது, ‘கடுகு, துணி சோப்பு, டீத்தூள் போன்ற பொருட்களை இதற்கு முன்பு எங்கள் தலையில் கட்டியுள்ளனர். அது பரவாயில்லை. குளியல் சோப்பை பொறுத்தவரை ஒவ்வொருவரும் குறிப்பிட்ட சோப்பை மட்டுமே பயன்படுத்துவர். இதில் இந்த சோப்பை வாங்கியே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறு’ என்றார்.

இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘நீங்கள் குறிப்பிடுவது போல் குறிப்பிட்ட பொருளை வாங்கினால்தான் அத்தியாவசிய பொருட்களை வழங்குவோம் என்று கட்டாயப்படுத்துவது தவறு. அப்படி கட்டாயப்படுத்தும் ரேஷன் கடை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் கூறும் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுகிறேன்’ என்று தெரிவித்தார்.

Related Stories: