சிறுவன் பாலியல் வன்கொடுமையால் உயிரிழப்பு: குஜராத் வாலிபருக்கு தூக்கு தண்டனை: புதுகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை: பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுவன் உயிரிழந்த வழக்கில், குஜராத் வாலிபருக்கு போக்சோ சட்டத்தின் 3 பிரிவுகளின்கீழ் 3 தூக்குத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி கல்குவாரி கிரஷரில் வேலை செய்து வந்தவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த டானிஸ் பட்டேல் (34). இவர், கடந்த 2019 டிசம்பர் 18ம் தேதி கீரனூருக்கு அருகே உள்ள ஒடுக்கூருக்கு சென்று வந்தபோது அந்த பகுதியை சேர்ந்த 17 வயது மனநிலை பாதிக்கப்பட்ட, வாய்பேச முடியாத  சிறுவனை ஏமாற்றி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான துவரங்காட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து தனது ஆசைக்கு இணங்கும்படி தொந்தரவு செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுவனுக்கு ஆசனவாயில் தொடங்கி குடல் வரை கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த உறவினர்கள் சிறுவனை புதுக்கோட்டை  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 18 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டம் மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிந்து டானிஸ் பட்டேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அங்கவி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளியான டானிஸ் பட்டேலுக்கு போக்சோ சட்டத்தின்கீழ் 3 உட்பிரிவுகளில் தலா ஒரு தூக்கு தண்டனையும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302ல் ஒரு ஆயுள் தண்டனையும், பிரிவு 363ல் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பை கூறி முடித்ததும் நீதிபதி, தீர்ப்பு எழுதிய பேனாவை உடைத்தார். இரண்டாவது  தூக்கு தண்டனை: இதே நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு மாதத்துக்கு முன்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிக்கு மூன்று தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

தற்போது, சிறுவன் பாலியல் வன்கொடுமை வழக்கிலும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 தீர்ப்பையும் நீதிபதி சத்யாவே வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அலட்டிக்கொள்ளாத குற்றவாளி: டானிஸ் பட்டேலுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கியதும் நீதிபதி எழுந்து சென்றார். இதனையடுத்து குற்றவாளியை கோர்ட் அறையில் இருந்து அழைத்து வந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமர வைத்தனர். இந்த தீர்ப்பால் எந்தவித சலனமும் இன்றி அவர் அமர்ந்திருந்தார்.

Related Stories: