உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது!: இலங்கை அகதி மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இலங்கை அகதி மீதான வழக்கை ரத்து செய்து ஆணையிட்டுள்ளது. சென்னை பூந்தமல்லியில் இருக்கும் சிறப்பு அகதி முகாமில் உள்ள சந்திரகுமார் என்பவர் தன்னை அங்கிருந்து விடுவித்து குடும்பத்தோடு தங்கும் முகாமுக்கு மாற்றக்கோரி கடந்த 2013ம் ஆண்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 309 வது பிரிவின் கீழ் அவர் மீது பூந்தமல்லி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்திரகுமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம் இலங்கை அகதி மீதான வழக்கை ரத்து செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உண்ணாவிரத போராட்டம் நடத்துவது தற்கொலை முயற்சி ஆகாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையும் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்ததாவது, இலங்கை தமிழ் அகதிகள் தங்களுடைய கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருப்பது என்பது இந்திய தண்டனை சட்டம் 309ன் கீழ் வராது என்றும், ஓராண்டுகள் கழித்து இந்த வழக்கில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் சட்டப்படி இந்த வழக்கு நிலுவை விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி காவல்துறையினர் இலங்கை அகதிகள் மீது போட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என குறிப்பிட்டார்.

Related Stories: