கோவில் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு?.. ஆக்கிரமிப்பாளர்கள் யார்?.. அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கோவில் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு என அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்; இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், அதாவது கோவிலுக்கு சொந்தமான இடங்கள், அவற்றின் கட்டண விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பட்டியல் வைக்கவும், பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள், ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கோவில் சொத்துக்களை கண்டறிய அடையாள குழுவும், பரிசீலனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நில குத்தகை மற்றும் வாடகைதாரர்கள் குடியிருப்போர் அனுபவத்தில் உள்ளோர், ஆகியோரிடம் இருந்து வரவேண்டிய 297.63 கோடி ரூபாய் பாக்கியை கேட்டு 42,818 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதில் 14,026 பேரிடம் இருந்து 32.49 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர்கள் யார்?, சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்பது தொடர்பான முழு விவரங்களையும், 10 மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: