எனது பணி மக்களுக்கான பணி தான்; தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை இரட்டை குழந்தையாக கருதி கவனம் செலுத்துவேன்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

புதுச்சேரி: தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை இரட்டை குழந்தையாக கருதி கவனம் செலுத்துவேன் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். தமிழிசைக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர், நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; புதுச்சேரியில் புதுமை செய்து காட்ட விரும்புகிறேன்.

பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்டகால கனவு. முதல் நிகழ்ச்சியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்க விரும்புகிறேன். ஆளுநரின் அதிகாரம் என்ன? துணை நிலை ஆளுநரின் அதிகாரம் என்ன? என்பது எனக்கு தெரியும். முதலமைச்சரின் அதிகாரம் என்ன என்பது குறித்தும் எனக்கு நன்கு தெரியும். புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் வழங்கிய மனுவை வார்க்க உள்ளேன். என்னை சந்தித்துப் பேச வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனக்கு எந்த சார்பும் கிடையாது; நான் சமமாக நடந்துகொள்வேன்.

தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்; ஆனால், தமிழ் போற்றப்படுகிறது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் முதலில் பழங்குடியினருக்கான உதவித்தொகை வழங்கும் கையெழுத்தை போட்டுள்ளேன். புதுச்சேரிக்கு தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்; இதனால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை இரட்டை குழந்தையாக கருதி கவனம் செலுத்துவேன் என கூறியுள்ளார்.

Related Stories: