திமுகவின் கோட்டையான வேலூர் சட்டமன்ற தொகுதி

பெரியாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்த அறிஞர் அண்ணா, 1949ம் ஆண்டு வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுகவை ஆரம்பிப்பதற்கான நோக்கங்களை விளக்கி பேசினார். அதன் பின்னரே 17.9.1949ம் தேதியில் சென்னை ஜார்ஜ் டவுன் 7, பவளக்கார தெருவில் தனது சகஆதரவாளர்களுடன் திமுகவை தொடங்குவதற்கான இறுதி முடிவு எட்டப்பட்டது. இந்த கூட்டத்தில், நாவலர் நெடுஞ்செழியன், ஈவேகி சம்பத், கருணாநிதி, அன்பழகன் போன்ற முன்னோடிகள் கலந்து கொண்டனர். மறுநாள் ராபின்சன் பூங்காவில் தி.மு.க தொடங்கப்பட்டது. அன்றைய தினம் திமுகவின் முதல் பொதுச் செயலாளராக அறிஞர் அண்ணா தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தி.மு.கவின் முதல் மாநாடு ஆரணியில் 1949ல் நடந்தது. திமுக தொடங்கப்பட்டதும், 1952ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் திமுக பங்கேற்கவில்லை. திராவிடர்களின் கருத்தை அறியாமலும், திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு கேடு விளைவிக்கும் வகையிலும், ஒரே கட்சியினரால் தயாரிக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தை திமுக கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் பங்கேற்பதில்லை என்று அப்போது திமுக அறிவித்தது.

ஆனாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை அடங்கிய திராவிட நாட்டின் தன்னாட்சி கோரிக்கையை ஏற்கும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது. இவ்வாறு திராவிட முன்னேற்ற கழகம் என்ற மிகப்பெரும் அரசியல் கட்சியை தொடங்குவதற்கு அச்சாரம் போட்ட வேலூர் மண், தொடர்ந்து திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகவே இன்று வரை விளங்குகிறது. இந்த கோட்டையை தனது கோட்டையாக மாற்ற முயன்ற மிகப்பெரும் அரசியல் சக்தியாக திமுகவில் இருந்து பிரிந்து வந்த எம்ஜிஆராலேயே முடியவில்லை என்பதும் சரித்திரம். அதற்கேற்ப தமிழக தேர்தல் வரலாற்றில் கடந்த 1952ம் ஆண்டு தொடங்கி 2016ம் ஆண்டு வரை நடைபெற்ற 15 சட்டமன்ற தேர்தல்களில் 6 தேர்தல்களில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவே வெற்றி பெற்றது. இதனை 7 ஆகவும் சொல்லலாம் என்பது திமுகவினரின் வாதம். காரணம், கடந்த 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட மா.பா.சாரதி, திமுகவை சேர்ந்தவர் என்பதுதான்.

அதற்கடுத்த இடத்தில் காங்கிரஸ் மாறி, மாறி திராவிட கட்சிகள் மற்றும் பிற கட்சிகளுடன் வைத்த கூட்டு காரணமாக 5 தேர்தல்களில் 4 தேர்தல்களில் வெற்றிபெற்றது. சட்டமன்றத்துக்கு 1952ல் நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் தனித்து வெற்றிபெற்றது. ஒரு முறை கருப்பையா மூப்பனாரின் தமாகாவும் திமுக கூட்டணி உதவியுடன் களம் கண்டு வெற்றிபெற்றது. கடந்த 1977 மற்றும் 2011ம் ஆண்டுகளில் மட்டும் அதிமுக வெற்றிபெற்றது. மிக அதிக முறை அதாவது 4 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட என்ற பெருமையை காங்கிரஸ் மற்றும் தமாகாவில் இருந்து தற்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ள சி.ஞானசேகரனையே சேரும். இவருக்கு அடுத்த இடத்தில் 1957, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றிபெற்றவர் என்ற பெருமையை வேலூர் மாவட்டத்தில் திமுகவை கட்டியெழுப்பியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் மா.பா.சாரதி. அதேபோல் 1980, 1984, 1989 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றவர் வேலூரின் சிங்கம் என்று திமுகவினரால் பெருமையுடன் குறிப்பிடப்படும் வி.எம்.தேவராஜ்.

Related Stories: