2016ல் பேரவை தேர்தலில் 3 தொகுதியை பிடிச்ச பாஜ...இப்போ ஆட்சியை கைப்பற்ற துடிக்குது!: காங்கிரசின் வியூகத்தால் மம்தாவுக்கு மேலும் நெருக்கடி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடந்த கடந்த பேரவை தேர்தலில் வெறும் 3 தொகுதியை பிடிச்ச பாஜக, இப்போது ஆட்சியை கைப்பற்ற பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. பாஜக நெருக்கடிக்கு மத்தியில் காங்கிரசின் வியூகத்தால் மம்தாவுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேற்குவங்கத்தில்  ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வருகிற  பேரவை தேர்தல் மிகப்பெரிய அரசியல் சவாலாக கருதப்படுகிறது. கடந்த 2016ல் நடந்த சட்டமன்றத்  தேர்தலில் பாஜகவுக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

அக்கட்சி 10.3%  வாக்குகள் மட்டுமே பெற்றது. ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 40%  வாக்குகளைப் பெற்று 18 இடங்களை வென்றது. அதனால், மேற்குவங்கத்தில் பாஜகவின்  அரசியல் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையில்  ஒவ்வொரு நாளும் மம்தாவுக்கான சவாலான நாளாக மாறி வருகிறது. காரணம், அவரது  கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவும் தலைவர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே  செல்கிறது. இத்தகைய சூழ்நிலையில், முஸ்லீம் வாக்குகள் முதல்வர்  மம்தாவுக்கு கிடைக்குமா? என்ற சந்தேகம் அதிகரித்து வருகிறது.

காரணம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி கூட்டணியுடன் சமீபத்தில்  புதியதாக ஆரம்பிக்கப்பட்ட இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐ.எஸ்.எஃப்) இந்த தேர்தலில்  போட்டியிடுகிறது. இதுகுறித்து மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘ஐ.எஸ்.எஃப் தவிர, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணியில் இணைந்து தேர்தல் களம் காணவுள்ளன. ஆளும் திரிணாமுல், பாஜகவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம்’ என்றார். தொடர்ந்து இடதுசாரி கட்சிகளின் முன்னணித் தலைவர் பிமன் போஸ் கூறுகையில், ‘வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், இடது முன்னணி, காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவோம்’ என்றார்.

கடந்த ஜனவரி 20ம் தேதியன்று ஃபர்ஃபுரா ஷெரீப்பின் பிர்சாட் அப்பாஸ் சித்திகி என்பவர் இந்திய மதச்சார்பற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். இவரது சகோதரர் நவுசாத் சித்திகி அக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அரசியல் கட்சியை அறிவித்த அப்பாஸ் சித்திகி, முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக தனது கட்சி செயல்படும் என்று கூறியிருந்தார். புதிய கட்சியை தொடங்குவதற்கு முன், கடந்த ஜனவரி 3ம் தேதி ஐதராபாத்தை சேர்ந்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை அப்பாஸ் சித்திகி சந்தித்தார்.

இருவருக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் உரையாடல் நடந்தது. அப்போது ஒவைசி கூறுகையில், ‘வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து அப்பாஸ் சித்திகியுடன் பேசினேன். இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட விரும்புகிறோம்’ என்றார். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் இடதுசாரி கட்சிகள் சார்பில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. காவல்துறையினர் நடத்திய கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு மற்றும் தடியடியில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இறந்தார். இதனால், அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் மம்தா அரசாங்கத்தின் மீது கோபமாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

Related Stories: