வைகை அணையின் நீர்மட்டம் குறைவதால் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறப்பு குறைப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் குறைவதால், 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. கடந்த மாதம் பெய்த மழையால், அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டியது. இதையடுத்து மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா கிராமங்களின் பாசன வசதிக்காக 58 கிராம கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், மதுரை மாவட்டத்திற்கு கால்வாய் மற்றும் ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த சில வாரமாக அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால், நீர்மட்டம் குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 67.67 அடி. வினாடிக்கு 503 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கும், 58ம் கால்வாயிலும், மதுரை மாநகர் குடிநீர் தேவை என வினாடிக்கு 719 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், நீர்வரத்து குறைவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. 67 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்தால், 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க முடியாது. தற்போது அணை நீர்மட்டம் குறைந்து வருவதால், 58ம் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 50 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் 2 நாட்களுக்கு மட்டுமே 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் எனவும், கடந்த ஒரு மாதத்தில் 310 மில்லியன் கனஅடி தண்ணீர் 58ம் கால்வாய் வழியாக திறக்கப்பட்டுள்ளது எனவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: