ஆளுநர், முதல்வர் எடுத்த நடவடிக்கை என்ன?.. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விளக்கம் கோரி பேரறிவாளன் மனு

சென்னை: தமது விடுதலை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பேரறிவாளன் தகவல்களை கோரியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளனை விடுவிப்பது குறித்து குடியரசு தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என தமிழக ஆளுநர் கூறி உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அவரது விடுதலை கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பேரறிவாளன் தகவல்களை கோரியுள்ளார். அதன்படி விடுதலை தொடர்பான அமைச்சரவை முடிவை வலியுறுத்தி கடந்த ஜனவரி 29-ம் தேதி ஆளுநரிடம் முதலமைச்சர் நேரில் அளித்த கடிதத்தின் நகல் மற்றும், ஆளுநர் பிறப்பித்த உத்தரவின் நகல்களை கேட்டுள்ளார். மேலும் அரசியலமைப்பு 161-வது பிரிவின் படி பேரறிவாளனின் மனுவினை மத்திய உள்துறைக்கு அனுப்பி விட்டதாக கூறும் ஆளுநரின் கடிதம் தமிழக அரசால் பெறப்பட்டதா?

எந்த தேதியில் பெறப்பட்டது? என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பேரறிவாளன் கேட்டுள்ளார். கருணை மனு மற்றும் தமிழக அமைச்சரவை பரிந்துரை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ஏதேனும் சட்ட ஆலோசனை பெற்றாரா? அப்படி பெற்றிருந்தால் ஆளுநரின் கடிதம் மற்றும் அளிக்கப்பட்ட ஆலோசனையில் நகல் ஆகியவற்றின் விவரங்களை தருமாறும் பேரறிவாளன் கோரியுள்ளார்.

Related Stories: