வீட்டுக்காய்கறி, மாடி காய்கறி தோட்டத்திற்கு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம்: தோட்டக்கலை அதிகாரி தகவல்

மன்னார்குடி: வீட்டுக் காய்கறி மற்றும் மாடி காய்கறி தோட்டத்திற்கு அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து, மன்னார்குடி தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் 2020-21ன் கீழ் வீட்டுக் காய்கறி தோட்டம் மற்றும் மாடி காய்கறி தோட்டத்தில் சொட்டுநீர் பாசன தழைகள் அரசு மானியத்தில் பெற்று பயன்பெறலாம். ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் 2020-21 வீட்டுக் காய்கறி தோட்டம் மற்றும் மாடி காய்கறி தோட்டம் அமைத்தவர்கள் மற்றும் புதிதாக அமைப்பவர்கள் தண்ணீர் செடிகளுக்கு எளிதாக பாய்ச்சுவதற்கு சொட்டுநீர் பாசன தழையினை புதிதாக அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சொட்டுநீர் பாசன தழையின் சிறப்பம்சம் ஒரு எளிய மூடித் திறப்பதன் மூலம் 60 காய்கறி பைகளுக்கு தண்ணீர் எளிதாகவும் சிக்கனமாகவும் பாய்ச்ச முடியும்.

இந்த சொட்டுநீர் பாசன தழையில் தண்ணீர் தொட்டியிலிருந்து இணைக்கப்படும் இணைப்பான் ஒன்றும், மூடி திறப்பான் ஒன்றும், தூசுகளை வடிகட்டும் வடிகட்டி ஒன்றும், 60 மி.மீட்டர் விட்டமுள்ள 20 மீ. நீளமுள்ள பிளாஸ்டிக் குழாய் ஒன்றும் மற்றும் இதர சொட்டுநீர் பாசனம் பொருத்தும் கருவிகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சொட்டுநீர் பாசனம் நாமே எளிதாக அமைக்கும் வகையில் ஒரு கையேடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசன தழையின் முழு விலை ரூ.1,120 ஆகும். அரசு மானியம் ரூ.400 போக மீதமுள்ள ரூ.720க்கு மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம் வட்டார பயனாளிகள் அரசு தோட்டக்கலைப் பண்ணை பெற்று பயன்பெறலாம். இந்த சொட்டுநீர் பாசன தழை பெறுவதற்கு தேவையானவை ஆதார் நகல் மற்றும் ரூ. 720 செலுத்தி பெற்று செல்லலாம் என்றார். மேலும் தொடர்புக்கு மூவாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் உதவி தோட்டக்கலை அலுவலர் விஜயகுமார் என்பவரை 8973895253 என்ற செல் எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: