சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது பாஸ்டேக்: குழப்பம் நீடிப்பதால் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்

டெல்லி: நாடு முழுவதும் பாஸ்டேக் நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து பல இடங்களில் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்த்தில் ஈடுபட்டதால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்கி நின்றன. சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் முறையால் வாகனங்கள் காத்திருக்கும் நிலை நிலவியது. இதை தவிர்க்கும் வகையில் 2016-ம் ஆண்டு மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறை கொண்டுவரப்பட்டது. பல முறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களிடம் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனை கண்டித்து பலஇடங்களில் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தமிழகத்தில் போரூர், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்பட்டன. பாஸ்டேக் ஒட்டியும் போதிய பணம் இருப்பு இல்லாத வாகன ஓட்டுநர்களிடம் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கோவை கணியூர் மற்றும் திருச்சி சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களிடம் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடும் சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற முறையில் சுங்கச்சாவடிகளில் பணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தினால் வாகனத்தை விற்க வேண்டிய நிலை தான் ஏற்படும் என வேதனை தெரிவித்த அவர்கள் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தங்கள் மீது மத்திய அரசு கடும் சுமைகளை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

Related Stories: